வயநாடு நிலச்சரிவு.. பாதிக்கப்பட்ட இடத்திற்கே சென்று ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!
திருவனந்தபுரம்: நிலச்சரிவு ஏற்பட்ட கேரளாவின் வயநாட்டிற்கு பிரதமர் மோடி வந்தார். முன்னதாக கண்ணூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவு பாதிப்பினை ஹெலிகாப்டரில் சென்றபடி ஆய்வு செய்தார். அதன்பிறகு வயநாட்டில் பாதிக்கப்பட்ட இடங்களை நடந்து சென்று பார்வையிட்டார்.
வயநாடு நிலச்சரிவு பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்து இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயணத்திற்கு பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு: கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது.
பிரதமர் மோடி வருகை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கேரளாவின் வயநாட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு வருகை தந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்ட்ட அவர் காலை 11.30 மணியளவில் கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வயநாடு புறப்பட்டார்.
ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும் மோடி அருகில் அமர்ந்து இருந்தார். அவர் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடிக்கு ஹெலிகாப்டரில் வைத்து விளக்கினார். இதேபோல் அதிகாரிகளும் மோடியிடம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விளக்கி கூறினார்.

இதனை தொடர்ந்து, பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி நடந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகம்து கான், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர். அப்போது பாதிப்புகள் குறித்து மோடியிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர்.
இதன் பின்னர் பிரதமர் மோடி, வயநாட்டில் மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினரிடம் கேட்டு அறிந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு மறுவாழ்வுப் பணிகள் எப்படி நடக்கின்றன? என்பதையும் மோடி பார்வையிடுகிறார். பின்னர், நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். இதனையடுத்து, நிலச்சரிவு பேரிடர், மீட்புப் பணிகள் பற்றி நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார்.

அப்போது மீட்புப் பணிகள் பற்றியும் அவருக்கு கேரளா அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது, முதல்வர் பினராயி விஜயன்உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிரதமர் மோடியின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி உதவி வேண்டும் என கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்கிறார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கேரளா முன்வைத்துள்ளது. இதனால், பிரதமர் மோடியின் வயநாட்டு பயணத்திற்கு பிறகு கேரளா நிலச்சரிவுக்கு அளிக்கப்படும் நிதி உதவி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications