வயநாட்டில் ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்! மீட்பு பணிகள் குறித்தும் ஆய்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்
தற்போதுவரை 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 288 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த துயரம் குறித்து இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, "நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மட்டுமல்லாது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு சென்றிருந்தனர்.
இன்று காலை 9.45க்கு கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்து சூரல்மலைக்கு சென்றனர். சூரல்மாலையில் நிவாரண முகாம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், மீட்பு பணிகளை பார்வையிட்டு நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications