அன்னதான பிரபுவே.. சரணம் ஐயப்பா! சபரிமலை பக்தர்களுக்கு கேரள ’சத்யா’ அன்னதானம்! மெனு என்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட புலாவ், சாம்பார் சாதம் போன்ற எளிய உணவுகள் மாற்றப்பட்டு, இன்று முதல் பாரம்பரிய கேரள 'சத்யா' மெனு அன்னதானமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சபரிமலை கூட்டம்
இதனால் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கூட்ட நெரிசல் குறைந்து இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அன்னதானம்
இந்த நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட உணவு பக்தர்களுக்கு போதுமான சத்தும் நிறைவையும் தரவில்லை என்ற பல புகார்கள் வாரியத்திற்கு சென்றிருந்தன. இதனால், பொதுமக்களின் நிதியுதவியை பயன்படுத்தி புதிய அன்னதான திட்டத்தை உருவாக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்தது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சத்யா மெனு
புதிய திட்டத்தின் கீழ், வாழை இலையில் பாரம்பரிய கேரள சத்யா உணவு பரிமாறப்படும். பொதுவாக சத்யாவில் குறைந்தது 9 வகை உணவுகள் வழங்கப்படவுள்ளது. அதில், நேந்திரம் வாழை சிப்ஸ், அவியல், எரிசேரி, கிச்சடி, பச்சடி, மோரும் ஊறுகாயும், பருப்பு, நெய், சாம்பார் மற்றும் பல்வேறு தேங்காய் அடிப்படையிலான உணவுகள் பரிமாறப்படும். இறுதியாக பாயாசமும் அளிக்கப்படும். ஆனால் சபரிமலை சத்யா மெனுவில் என்னென்ன உணவுகள் இடம்பெறுகின்றன என்பது குறித்து அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
திருவிதாங்கூர் தேவஸ்தானம்
இந்த அன்னதானத்திற்கான செலவை தேவஸம் போர்டு மட்டும் தனியாக ஏற்கவில்லை. பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நிதி உதவிகளை பயன்படுத்தி இந்த சிறப்பு உணவு பரிமாறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் கொடுக்கும் நிதி அவர்களுக்கே திரும்ப பயன்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என தேவஸ்வம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார்த்திகை முதல் தை மாதம் வரை மட்டுமே சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த இரண்டு மாதங்களில் பக்தர் திரள் அதிகரிக்கும். இந்த காலத்தில் பக்தர்களுக்கு சத்தான மற்றும் பாரம்பரிய உணவு வழங்குவது தேவஸ்வம் போர்டின் நோக்கம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications