சபரிமலை கோவில் உளவு பார்க்கப்பட்டதா? உயரம் குறைவாக பறந்த ஹெலிகாப்டர்.. இந்திய கடற்படை விளக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை கோவில் உள்ளது. இந்நிலையில் தான் நேற்று மதியம் திடீரென்று கோவில் வளாகத்தின் மேல்புறம் உயரம் குறைவாக இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் 4 முறை பறந்தது. இதனால் அங்கிருந்த போலீசார் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்திய கடற்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை கோவில் அமைந்துள்ளது. நேற்று மதியம் சுமார் 12 மணி முதல் 12.30 மணிக்குள் ஹெலிகாப்டர் ஒன்று 4 முறை உயரம் குறைவாக பறந்து சென்றது. குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் இருந்து 5 மீட்டர் உயரத்தில் தான் இந்த ஹெலிகாப்டர் பறந்தது.

மீண்டும் மீண்டும் இந்த ஹெலிகாப்டர் பறந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உளவு பார்த்த ஹெலிகாப்டர்?
அதோடு ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் ஒருவர் கோவில் வளாகத்தை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதனால் யாரோ கோவிலை உளவு பார்ப்பதாக அவர்கள் நினைத்தனர். இதனால் பரபரப்பு தொற்றி கொண்டது. அங்கிருந்தவர்கள் கோவில் வளாகத்தின் மேல் பறந்த ஹெலிகாப்டரை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து கொண்டனர். இதுபற்றி பம்பை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டர்.
பாய்ந்த வழக்கு
முதற்கட்ட விசாரணையில் அந்த ஹெலிகாப்டர் இந்திய கடற்படையின் Chetak ரக ஹெலிகாப்டர் என்பது தெரியவந்தது. அதன் எண் CG -821 என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதோடு அதில் பறந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சபரிமலை கோவில் வளாகத்தின் மேல் ஹெலிகாப்டர் பறந்து செல்ல எந்த முன்அனுமதியும் பெறவில்லை, கோவில் வளாகத்தை அனுமதியின்றி போட்டோ, வீடியோ எடுத்ததால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் ஏன் தாழ்வாக கோவில் வளாகத்தின் மேல் பறந்தது? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி பம்பை போலீசார் கூறுகையில், ''சபரிமலை பகுதியில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளோம். சன்னதானத்தின் மீது ஹெலிகாப்டர் பறந்ததை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நேரில் பார்த்துள்ளனர்.அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. 4 முறை ஹெலிகாப்டர் பறந்து சென்றுள்ளதோடு, போட்டோ, வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் பறக்க எந்த அனுமதியும் கோரப்படவில்லை'' என்றனர்.
கடற்படை விளக்கம்
இதன் தொடர்ச்சியாக தான் இந்திய கடற்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ''இது ஒரு ரோந்து ஹெலிகாப்டராகும். கொச்சியில் இருந்து 60 முதல் 80 கிலோமீட்டர் தொலைவுக்கு வழக்கமாக பறந்து பயிற்சியில் ஈடுபடும். இந்த ஹெலிகாப்டர் 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. ஆனால் மதியம் வேளையில் அதிகப்படியான மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து ஹெலிகாப்டர் விலகியதோடு உயரம் குறைவாக பறந்தது.
பம்பை மலையில் மேல் பறந்தது. வானிலை சரியான பிறகு மீண்டும் அந்த ஹெலிகாப்டர் கொச்சி தளத்துக்கு வந்தது'' என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மோசமான வானிலை காரணமாக தான் ஹெலிகாப்டர் சபரிமலை கோவில் சன்னிதானத்தின் மேல் உயரம் குறைவாக பறந்தது. இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது.













Click it and Unblock the Notifications