செந்தில் பாலாஜி விவகாரம்: எனக்கு சட்டம் தெரியாது ஆனாலும்.. கேரள ஆளுநர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
திருவனந்தபுரம்: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிவித்த தமிழக ஆளுநர் பிறகு அந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கேரள ஆளுநரிடம் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 13 ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு உள்ளிட்ட சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பல மணி நேரம் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை தேவைப்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அங்கு அறுவை சிகிச்சை முடிந்து தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து அதிரடியாக ஒரு அறிக்கை வெளியானது. . இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அமைச்சரை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை.
இதனைச் சட்டப்படி சந்திப்போம்" என்று தெரிவித்தார். ஆளுநரின் அறிவிப்புக்கு எதிராக சட்ட போராட்டத்தை கையில் எடுக்க திமுக அரசு திட்டமிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து அறிவித்த முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் திடீரென அறிவித்தார். தொடர்ந்து, ஆளுநரிடமிருந்து முதலமைச்சருக்கு இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், முன்பு தான் எடுத்த முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.
அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைக் கேட்பதே சரியாக இருக்கும் என மத்திய உள்துறை தெரிவித்து இருப்பதாகவும் ஆகவே, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை கோரப்பட்டு இருப்பதாகவும் என்னிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று ஆளுநர் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள முரண்பாடு தமிழக அரசியல் களத்தை கொதிக்க வைத்துள்ளது. இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானிடம் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கூறியதாவது:-
"பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில ஒழுக்கங்கள் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதுதான் நான் முன்வைக்கும் கேள்வி. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அது நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு அந்த நபர் அமைச்சராக தொடர்வார் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் நான் சட்ட ரீதியாக சொல்லவில்லை. அது எனக்கு தெரியாது.
இருந்தாலும் உங்கள் மீது சந்தேகம் எழுகிறது என்றால் முதலில் அதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications