வெளிநாடு டூ கேரளா 15 லட்சம் பேர்.. கேரளா டூ வெளிநாடு 27 லட்சம் பேர்.. பயணம் விரும்பும் மலையாளிகள்..!
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த 15 லட்சம் மலையாளிகள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்பியுள்ளனர்.
அதில் பத்து லட்சத்து 40 ஆயிரம் மலையாளிகள் வெளிநாடுகளில் வேலை இழந்ததால் சொந்த ஊர்களுக்கு திரும்பினர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், கொச்சின் உட்பட கேரளாவில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்திய விமான நிலைய ஆணையம் எடுத்த தரவுகளின் படி இந்த தகவல் வெளிவந்துள்ளது.

புள்ளிவிவரம்
இதனிடையே கடந்தாண்டு மே மாதம் முதல் இதுவரை 27 லட்சம் பேர் கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் நோர்கா என்ற அமைப்பு மேற்கொண்ட புள்ளிவிவர ஆய்வுகளின் படி, 14 லட்சத்து 63 ஆயிரத்து 176 பேர் கடந்த ஒரு ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியுள்ளதாகவும், அதில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 288 பேர் அதாவது 70% பேர் வேலை இழப்பு காரணமாக ஊர் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகள்
எஞ்சிய 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் விசா காலாவதி, வயது மூப்பு, குடும்ப சூழல் காரணமாக சொந்த மாநிலத்துக்கு திரும்பி வந்துள்ளதாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஆகிய 4 நாடுகளிலிருந்து மட்டும் 96% பேர் ஒரே ஆண்டில் சொந்த மாநிலமான கேராளவுக்கு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய மலையாளிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டும் 8 லட்சத்து 63 ஆயிரம் நபர்கள் ஆவர்.

27 லட்சம் பேர்
கேரளாவிலிருந்து கடந்த ஓராண்டில் வெளிநாடுகளுக்கு சென்ற 27 லட்சம் பேர்களில் பெரும்பாலானோர் வணிக ரீதியான பயணம் மேற்கொண்டவர்கள் என்றும் அடுத்தபடியாக குறுகிய காலத்தில் பணி நிமித்தமாக சென்றுவரக் கூடியவர்கள் எனவும் நோர்கா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

கேரள அரசு
வெளிநாடுகளில் வேலை இழந்து கேரளா திரும்பியவர்களுக்கு மாநில அரசு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கும் நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே அதற்கு விண்ணபித்துள்ளனர். பத்தரை லட்சம் பேர் வேலை இழப்பு காரணமாக ஊர் திரும்பினாலும் கூட கேரள அரசு கொடுக்கும் நிவாரணத் தொகையை பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications