சாப்ட்வேர் இன்ஜினியர் டூ கோயில் பூசாரி.. "எங்க பரம்பரை தொழில்".. அதிரடி முடிவெடுத்த கேரள இளைஞர்
கடந்த சில மாதங்களாகவே சாந்தனுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பிடிக்காமல் போயுள்ளது. தாங்கள் பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த பூசாரி வேலை மீது அவருக்கு திடீர் ஆர்வம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயியாக மாறிய இளைஞர்களை பார்த்திருப்போம். ஆனால், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை உதறித்தள்ளிவிட்டு கோயில் பூசாரியாக இளைஞர் ஒருவர் மாறிய சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.
பூசாரி வேலை செய்யும் போது கிடைக்கும் திருப்தி சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையில் கிடைக்கவில்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் உத்தரவை அடுத்து, அங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பூசாரியாக வருவது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் முதன்மை அர்ச்சகராக இருந்தவர் நாராயணன் நம்பூதரி. இவர் ஆற்றுக்கால் கோயில் பரம்பரையை சேர்ந்தவர். இவரது மகன் சாந்தனு, நாகர்கோயிலில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

பூசாரி வேலை மீது ஆர்வம்
ஆனால், கடந்த சில மாதங்களாகவே சாந்தனுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பிடிக்காமல் போயுள்ளது. தாங்கள் பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த பூசாரி வேலை மீது அவருக்கு திடீர் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு பூசாரி வேலைக்கு சேர்ந்தால் அனைவரும் தன்னை கிண்டல் செய்வார்கள் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இதனிடையே, தனது ஆசை பற்றி தந்தை நாராயணன் நம்பூதரியிடம் கூற, அவர் உடனே புறப்பட்டு வா என்று கூறியுள்ளார்.

பூசாரியாக மாறிய சாப்ட்வேர் இன்ஜினியர்
இதையடுத்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாந்தனு, தனது சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், தாங்கள் பரம்பரை பரம்பரையாக வேலை பார்த்து வந்த திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணியில் சேர்ந்தார் சாந்தனு. சாப்ட்வேர் வேலை வேண்டாம் எனக் கூறி பூசாரி வேலைக்கு வந்த சாந்தனுவை பற்றிதான் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

"இப்போதான் நிம்மதி"
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், "என்னதான் லட்சக்கணக்கில் வருமானம் வாங்கினாலும், மனதுக்கு பிடித்த வேலையை பார்ப்பதில்தான் மகிழ்ச்சி என்பதை சில மாதங்களுக்கு முன்புதான் புரிந்துகொண்டேன். மேலும், குடும்பத்தை பிரிந்து எங்கோ ஒரு நாட்டில் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எனக்கு இருந்தது. மேலும், கோயில் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. எனது ஆசைக்கு என் தந்தை, மனைவி என யாரும் குறுக்கே நிற்கவில்லை. எனவே, எனது முன்னோர்களை போல ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications