தென்மாநில முதலமைச்சர்கள் குழு - மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் முன்வைக்கும் பிளான்
திருவனந்தபுரம்: மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள தென் மாநில முதலமைச்சர்களை கொண்ட குழுவை அமைத்து போராட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
"மாநிலங்களின் உரிமைகளுக்காக போராட தென் மாநில முதலமைச்சர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள இந்த குழு வேண்டும்.

அரசியலமைப்பில் திருத்தம் வேண்டும்
மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பினராயி விஜயனும் நானும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து இருந்தால் நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியையும் தந்திருக்க மாட்டார்கள். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்திட வேண்டும்.

மாநிலங்கள் இணைந்தால்தான் நாடு
தேசிய அளவில் வெற்றியடைவதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் இறையான்மையையும் பாதுகாக்க முடியும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பாஜக அரசு பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது.

நிதி வழங்காத மத்திய அரசு
தங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது மத்திய அரசு. மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதே இல்லை. தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து ரூ.21,000 கோடி நிதி வர வேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்திட வேண்டும். நாம் நிதியை கேட்க பயன்படுத்தப்படும் வளர்ச்சிக்குழு மற்றும் திட்டக்குழுவையும் பறித்துவிட்டார்கள்.

ஆளுநரை வைத்து ஆட்சி
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய முயல்வதுதான் சட்டத்தின் ஆட்சியா? ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இரு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி." என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாடு
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு அகில இந்திய மாநாடு நாளை நிறைவடைகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

சீதாராம் யெச்சூரியுடன் சந்திப்பு
இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications