வயநாட்டில் மாயமான 3 தமிழர்களின் நிலை என்ன? "ஒன்இந்தியாவிற்கு" தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பேட்டி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அதிர்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த பேரிடரில் கேரள அரசுக்கு கைக்கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. மேலும் மீட்புப் பணியில் துரிதப்படுத்துவதற்காகவும், அங்குள்ள தமிழர்களை மீட்பதற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகளை வயநாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி ஜி.எஸ். சமீரன் ஐஏஎஸ், ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ் தலைமையில் அதிகாரிகள் வயநாட்டில் பணியாற்றி வருகிறார்கள்.
அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து "ஒன் இந்தியா தமிழிடம்" சமீரன் ஐஏஎஸ் பகிர்ந்து கொண்டார். அவர், “மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
200க்கும் மேற்பட்ட சடலங்களும், 100க்கும் மேற்பட்ட உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது எத்தனை பேரின் உடல் என்ற விவரம் தெரியவில்லை. மொத்தம் 93 நிவாரண முகாம்களில் சுமார் 10,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மேப்பாடி, முண்டகை பகுதிகளில் குடியேறி 3-4 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்து வருகிறோம். தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக மோப்ப நாய் குழு கேட்டிருந்தனர். அதன்படி தமிழ்நாட்டில் இருந்து 5 மோப்ப நாய் குழுக்கள், இன்று முதல் கேரள அரசின் மீட்புக் குழுவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஹிட்டாச்சி, கட்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களும் வழங்கியுள்ளோம்.” என்றார்.

தமிழ்நாட்டில் இருந்து 2 ஐஏஎஸ் அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை, மோப்ப நாய் குழுவினர் சென்றுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள நிவாரண முகாம்களில் தொடர்ந்து ஆய்வு செய்து தேவையான பணிகளை செய்து வருகின்றனர். இதேபோல சில பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளும் வயநாட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கன்ட்ரோல் ரூமில் இருந்து ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அங்கு பணியாற்றி வரும் சில அதிகாரிகளிடம் பேசியபோது, “முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, மாயமான தமிழர்களை தேடுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து இங்கு பணிக்காக வயநாடு வந்த 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம். இதேபோல, தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டு வயநாட்டில் செட்டிலான சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கேரள மாநில அரசின் உதவியுடன் அவர்களை தேடி வருகிறோம். சுமார் 5க்கும் மேற்பட்ட தமிழ் அதிகாரிகள் இந்த ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்றனர்.













Click it and Unblock the Notifications