வயநாடு நிலச்சரிவு.. உணவு விநியோகிக்க கேரள அரசு தடை.. தன்னார்வலர்கள் கொந்தளிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க கேரள அரசு தடை விதித்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளுக்கு மட்டுமே அதிகாரிகள் சென்று உணவு விநியோகிப்பதாகவும், மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். மருத்துவமனைகள் மற்றும் முகாம்களுக்கு தொடர்ந்து உறவினர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். அங்கு உறவினர்கள் கிடைக்கவில்லை எனில் பிணவறைகளுக்குச் சென்று தேடி வருகின்றனர். மீட்கப்பட்டு கொண்டு வரப்படும் அனைத்து சடலங்களையும் அடையாளம் காணும் கொடுமை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர், வாக்கி டாக்கி, ரேடார் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், காவல் துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவோர்கள் என அப்பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் பலர் உணவு, பிஸ்கட், தண்ணீர், பன் உள்ளிட்டவற்றை கொடுத்து வருகின்றனர். கிராம மக்களும் இந்த உணவையே நம்பியுள்ளனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் உணவு விநியோக்க கூடாது என்று தடை விதித்துள்ளது தன்னார்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சூரல்மாலா பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் கூறுகையில், அரசு சார்பில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கான முறையான திட்டம் இல்லை. காலை 8 மணியில் இருந்து தேடுதல் குழுவினருக்கு உதவிகளைச் செய்து வருகிறேன். எனக்கு மதிய உணவுகூட கிடைக்கவில்லை. மாலை 4.30 மணியளவில் ஒரு பன், பிளாக் டீ மட்டுமே கிடைத்தது என்றார்.
மனோஜ் கூறுகையில், நிவாரண முகாமில் அமைதியாக உட்கார்ந்திருக்கலாம். ஆனால், எங்களது மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். எந்தப் பகுதியில் வீடுகள் இருந்தன. எத்தனை இருந்தன என்பது குறித்து எங்களுக்குத்தான் தெரியும். 20 கி.மீ. தொலைவில் உள்ள முப்பைநாடு பஞ்சாயத்தில் உள்ள கடச்சிக்குன்னு பகுதியில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த உணவை நம்பித்தான் நாங்கள் இருந்தோம். சரியான நேரத்தில், சூடான உணவை விநியோகம் செய்தனர். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நான்கு நாட்களுக்கு சுமார் ஆயிரம் முதல் 1,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. வீடுகள் சேதமடையாதவர்களும் இந்த உணவைத்தான் நம்பியிருக்கின்றனர். ஏனெனில் சூரல்மலா பகுதியில் எந்த கடைகளும் இப்போது இல்லை. எரிவாயு, விறகுகள் போன்ற எதுவும் இல்லை என்றார்.
ஓட்டுநர் பஷீர் கூறுகையில், கடச்சிக்குன்னு பகுதியில் இருந்து 1,200 பேருக்கு உணவு கொண்டு வரப்பட்டது. ஆனால், சூரல்மாலாவில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுமலை பகுதியில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, வழிப்போக்கர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அந்த உணவை அவர்கள் வழங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குப் பதிலாக கேரள ஹோட்டல் மற்றும் உணவகங்கள சங்கத்தின் உதவியுடன் அரசு பாலிடெக்கினிக்கில் ஒரு சமூக சமையலறையைத் துவங்கியது. 1705 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது என்று சமையலறை பொறுப்பாளர் சித்தாரா தெரிவித்தார். ஆனால், அங்கு சுமார் ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மட்டுமே தயார் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறினர். ஜீப் செல்லக்கூடிய பகுதிகளுக்கு மட்டுமே அதிகாரிகள் சென்று உணவுகளை வழங்குகின்றனர். பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டதாக மனோஜ் என்பவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க தடை விதித்ததற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அமைச்சர் முகமது ரியாஸ், ராணுவம் மற்றும் என்டிஆர்எப் வீரர்கள் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது. மற்ற பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் உணவு வழங்கலாம். பாதுகாப்புக்காக ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவை சோதனை செய்வது நியாயமான தேவையாகும். உணவு வழங்கும் தன்னார்வலர்களின் நல்ல உள்ளத்தை நாங்கள் சந்தேகப்படவில்லை. ஆறு தேடல் மண்டலப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உணவு விநியோகிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடச்சிக்குன்னு பகுதியைச் சேர்ந்த யூசுப் கூறுகையில், கடச்சிக்குன்னு, புதுக்காடு வார்டுகளில் உள்ள சுமார் 450 குடும்பத்தினர் உணவு தயாரிப்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். உணவு சூடு குறைந்துவிடும் என்பதால் அதனை நாங்கள் பேக் கூட செய்வதில்லை. அப்படியே கொப்பரைகளில்தான் கொண்டு செல்கிறோம். எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுபவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அரசாங்கம் அதனைத் தடுப்பது எங்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. பல பகுதிகளில் உணவு கொண்டு செல்வதை காவல் துறையினர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து, டிஐஜி தாம்சன் ஜோஸ் கூறுகையில், தேடுதல் பணியில் ஈடுபடுவர்களுக்கு உணவு வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முக்கியக் காரணம் உணவுப் பாதுகாப்புதான். ஒன்றிரண்டு அமைப்புகள் மட்டும் இப்பணியில் ஈடுபடுவதில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்புகள் உட்பட கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பெய்லி பாலம், முண்டக்கை, பூஞ்சரிமட்டம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் பொதுவான இடங்களில் அவர்கள் உணவை கொடுத்துச் செல்லலாம். ஆனால், அவர்கள் அதற்கு சம்மதிப்பதில்லை என்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் பேசுகையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் உணவு கிடைக்காதவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications