ரூ.20 கோடி யாருக்கு? ஒரு வழியா ஆரம்பிச்சாச்சு.. ”கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சேல்ஸ்”
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட "கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி" விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 5 ஆம் தேதியே இதற்கான லாட்டரி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 13 நாட்களுக்கு பிறகு நேற்று தான் விற்பனை தொடங்கியிருக்கிறது. பரிசுத்தொகைகள் குறைக்கப்பட்டதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அச்சிடப்பட்ட 12 லட்சம் டிக்கெட்டுகள் அழிக்கப்பட்டு நேற்று முதல் புது லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இது பொதுவாழ்க்கைக்கு பொறுந்துகிறதோ இல்லையோ லாட்டரிக்கு அப்படியே இது பொருந்தும். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதும் இதில் தான் நடக்கும். ஒரு வேளை உணவுக்கு கூட அல்லோலப்படும் நபர் அடுத்த நாளே பல கோடிகளுக்கு சொந்தமாகும் நிகழ்வும் லாட்டரியால் சாத்தியம் தான்.

அதற்காக லாட்டரிகளை வாங்கி குவிக்கும் அனைவருக்கும் பரிசு கிடைக்குமா என்றாலும் அதற்கும் சாத்தியமில்லை. லாட்டரி விற்பனையால் ஒருவர் பணக்காரர் ஆனாலும், ஏனைய பலரும் அதில் பணத்தை இழக்கத்தான் செய்கிறார்கள். இதன் காரணமாகவே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழக அரசு தடை செய்தது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையை அரசே நடத்தி வருகிறது.
கேரளாவில் தினமும் 40 ரூபாய் கொண்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் பரிசாக 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். தினமும் மதியம் 3 மணியளவில் இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது. புதன் கிழமை மட்டும் ஒரு லாட்டரி சீட்டு 50 ரூபாய் ஆகும். இதற்கான முதல் பரிசும் 1 கோடி ரூபாய் ஆகும். இதனால் கேரளாவில் தினம் தோறும் ஒருவர் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகி வருகிறார்.
இது போக கேரளாவில் அதிக பரிசுத் தொகை கொண்ட "பம்பர் லாட்டரி" சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பூஜா பம்பர் லாட்டரி, ஓணம் பம்பர் லாட்டரி, கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி என 6 வகையான பம்பர் லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஓணம் பம்பர் லாட்டரிக்கு தான் அதிகபட்சமாக முதல் பரிசு ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. தற்போதைய சீசனுக்கான முதல் பரிசு ரூ.20 கோடி கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
கேரளாவில் கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டானது வழக்கமாக டிசம்பர் மாதம் தொடங்கியதுமே விற்பனை செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த முறை இரண்டு வாரம் கழித்து நேற்று தான் விற்பனை தொடங்கியிருக்கிறது. இதற்கான ஒரு டிக்கெட்டின் விலையானது ரூ.400 ஆகும். முதல் பரிசு ரூ.20 கோடி ஆகும். கடந்த 5 ஆம் தேதியே இதற்கான லாட்டரி சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனை தொடங்கவில்லை. மாறாக அச்சிடப்பட்ட 12 லட்சம் டிக்கெட்டுகளையும் கேரள அரசு கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு காரணம் என்னவென்றால், இந்த முறை கிறிஸ்மஸ் லாட்டரியில் பரிசுத்தொகையை ரூ.9.31 கோடியை அரசு குறைத்தது. அதாவது மொத்த பரிசுத்தொகையில் ரூ.5 ஆயிரம், ரூ, 2 ஆயிரம், ஆயிரம் பரிசுத்தொகை வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதேபோன்று, ஏஜெண்ட் கமிஷனும் 93.16 லட்சம் குறைக்கப்பட்டது. இந்த லாட்டரியின் மொத்த மதிப்பு சுமார் 9 கோடியாகும்.
பரிசுத்தொகை முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதற்கு லாட்டரி ஏஜெண்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டமும் செய்தனர். இதன் காரணமாகவே அச்சடிக்கப்பட்ட 12 லட்சம் டிக்கெட்டுகளையும் அரசு திரும்பப்பெற்றது. மீண்டும் புது டிக்கெட்டுகளை அச்சடித்து விரைவில் விற்பனைக்கு விடப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி தான் நேற்றுமுதல் இந்த லாட்டரி சீட்டுக்கள் விற்பனை தொடங்கியுள்ளது.
முதல் பரிசு ரூ.20 கோடி என்பதால், விற்பனை நேற்று தொடங்கியது என்று அறிந்ததுமே லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். பல நேரங்களில் முதல் பரிசு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கிறது என்பதால், சபரிமலை மற்றும் கேரளாவுக்கு செல்பவர்கள் லாட்டரி சீட்டுக்களை நேற்றே வாங்கத் தொடங்கினர். எது எப்படியோ, இந்த முறை ரூ.20 கொடி வெல்லப் போகும் அதிர்ஷ்டக்கார நபர் யார் என்பது, பிப்ரவரி 5 ஆம் தேதி தெரிந்துவிடும். ஏனென்றால், இதற்கான குலுக்கல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தான் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications