என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? போதையில் இளைஞர் செய்த 'சம்பவம்'.. கடைசியில் செம டிவிஸ்ட்
திருவனந்தபுரம்: ஆட்டோ ஓட்டியதால் வீட்டில் தூசி படிந்துவிட்டது என்று கூறி இளைஞர் ஒருவர் ஆட்டோ டிரைவரின் வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்கத்து வீட்டுக்காரர்களுடனான அடிதடி சண்டை என்பது காலங்காலமாக தீராத ஒரு பிரச்னையாகவே நீடித்து வருகிறது. எப்போதாவது இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-வடகொரியா பிரச்னைகள் கூட முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இந்த பக்கத்து வீட்டுக்காரர்களின் சண்டைக்கு மட்டும் ஒரு என்ட் கார்டே கிடையாது. அப்படியொரு சம்பவத்தைதான் கேரள போலீஸ் எதிர்கொண்டுள்ளது. பிரச்னை பெருசா ஒன்னுமில்லிங்க. உள்ளியேரி புதுவயல்குனி பகுதியில் பகத்துவீட்டுக்கார பையன் ஒருவன் தன்னுடைய வீட்டை கொளுத்திவிட்டதாக கம்ப்ளைண்ட்.

ஆனால் இதை விசாரிச்சப்போதான் பல 'ஷாக்' தகவல்கள் தெரிய வந்திருக்கு. அதாவது கம்ளைண்ட் கொடுத்தவர் யூசுப். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். வண்டிய எடுத்தோமா சவாரி அடிச்சோமானு இல்லாம பக்கத்து வீட்டுக்கார இளைஞன் ஃபைஸ் என்பவருடன் நட்பு வைத்துக்கொண்டிருக்கிறார். இங்குதான் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஃபைஸ் ஆள் பாக்கத்தான் அப்பாவி.. ஆனால் செய்யும் காரியங்கள் எல்லாம் அடப்பாவி என்பதை போல இருக்கும்.
அதாவது நம்ம ஃபைஸ் ஒரு முறை பக்கத்து தெருவில் இருக்கும் டெய்லரிடம் சட்டை தைக்க துணி கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களில் சட்டை கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்றாவது நாள் ஆகியும் சட்டை கைக்கு கிடைக்கவில்லை. டெய்லருக்கோ ஏகப்பட்ட 'கிராக்கிகள்' இருப்பதால் எதை முதலில் கொடுப்பது என்கிற குழப்பம் வேறு. இந்த நேரத்தில்தான் ஃபைஸ் சட்டையை கேட்டிருக்கிறார். "நாளைக்கு கெடைச்சிடும்" என டெய்லர் சமாதானம் சொல்ல.. இதைகேட்டு கடுப்பான ஃபைஸ் தையல் மெஷினை தூக்கி கொண்டு போய் ஆற்றில் போட்டிருக்கிறார்.
அடப்பாவி ஒரு நாள் லேட் ஆனதுக்கு இப்படி மெஷின ஆத்துல போட்டுட்டியே என டெய்லர் ஃபைஸை பொளக்க.. ஆள் சிரித்துக்கொண்டே நின்றுக்கொண்டிருந்திருக்கிறார். ஆக இதுதான் ஃபைஸின் டைப்! இப்படிபட்டவருடன்தான் யூசுப் நண்பராகியுள்ளார். தொடக்கத்தில் எல்லாம் சரியாதான் சென்றுக்கொண்டிருந்துள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் திடீரென ஒருநாள் யூசுப் வீட்டிற்கு வேகமாக வந்த ஃபைஸ், "இங்க பாரு யூசுப்ப நாளையிலிருந்து நீ வண்டி ஓட்டும்போது பொறுமையா போவனும். நீ ஓட்டுற வண்டியிலிருந்து வர தூசு எங்க வீடு புஃல்லா ரொம்பிடுது" என்று கண்டித்துள்ளார்.
என்னடா இது ஆட்டோவுக்கு வந்த சோதனை? ரோடுன்னா அப்படி இப்படி வண்டிங்க போகதான செய்யும்? இதுக்குபோயி இவன் கோவப்படுறானே என யூசுப் புலம்பியுள்ளார். அடுத்த நாள் யூசுப் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பியுள்ளார். கொஞ்ச நேரத்திலேயே வீட்டிலிருந்து போன் வந்திருக்கிறது. உடனே வீட்டுக்கு வண்டியை திருப்பியுள்ளார். வந்து பார்த்தால் வீடு ஒரு பக்கம் கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. யூசுப்புக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
உடனடியாக தண்ணீரை கொண்டு தீ அணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வீட்டில் உள்ள பொருட்களெல்லாம் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளன. என்ன ஆச்சு என அம்மாவிடம் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது. அதாவது யூசுப் ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற உடனேயே வீட்டிற்குள் புகுந்த ஃபைஸ் கண்ணில் பட்டதெல்லாத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். மட்டுமல்லாதது வீட்டின் ஒரு பக்கத்தில் தீ வைத்திருக்கிறார். இதனையடுத்து யூசுப் தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஃபைஸை அவர்கள் கைது செய்தனர்.
விசாரணையில் ஃபைஸ் கூறிய தகவல்கள்தான் போலீசாருக்கு ஷாக்காக இருந்திருக்கிறது. அதாவது, யூசுப் வேகமாக ஆட்டோ ஓட்டி சென்றதால் கிளம்பிய தூசி தனது வீட்டில் சேர்ந்ததாகவும் எனவேதான் வீட்டை கொளுத்தியதாகவும் கூறியுள்ளார். இதுகெல்லாமா யாராவது வீட்டை கொளுத்துவாங்க? என போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கொண்டு விசாரித்ததில் ஃபைஸ் நீண்ட ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications