வாகனத்தில் பயணிப்பதே வரம்.. ஊட்டி,கொடைக்கானலை தாண்டி தீபாவளி வீக்கெண்டில் டூர் செல்ல சூப்பர் இடங்கள்
கொடைக்கானல் : தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பலரும் இன்று சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக புறப்பட்டு வருகிறார்கள். தீபாவளி, தீபாவளிக்கு மறுநாள், மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை விடப்படுவதால் பலரும் சுற்றுலா செல்லவும் திட்டமிட்டிருப்பார்கள். அப்படி தீபாவளி வீக் எண்டில் சுற்றுலா செல்ல தமிழ்நாட்டில் அற்புதமான இடங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதேபோல் தீபாவளிக்கு மறுநாளை நோன்பி என்று பலர் கொண்டாடுவார்கள். தீபாவளி, தீபாவளிக்கு மறுநாள், மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் பலரும் சுற்றுலா செல்ல ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக சிறந்த இடங்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல பல இடங்கள் இருந்தாலும், இப்போது கிளைமேட் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் குளுகுளுவெனவே இருக்கும். சென்னையை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் காலநிலை நன்றாகவே இருக்கும். எனினும் இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு, ஊட்டியும், கொடைக்கானலும், ஏற்காடுமே பிடிக்கும். அதேநேரம் இந்த இடங்களை தாண்டியும் பல அற்புதமான இடங்கள் உள்ளன. கூகுளிலேயே தெரியாத பல அற்புதமான இடங்கள் உள்ளன. திரில்லான அனுபவம் வேண்டும் என்பவர்கள் இந்த பட்டியலை பாருங்கள்.

கொடைக்கானல் வெள்ளகவி: தீபாவளி சுற்றுலாவிற்கு கொடைக்கானல் சென்றால் வெள்ளகவி கிராமத்திற்கு போகலாம். வெள்ளகவி கிராமம் என்பது கும்பக்கரை அருவிக்கு மேலே 9 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அரசே டிரக்கிங் அழைத்து செல்கிறார்கள். தனியார்களும் டிரக்கிங் அழைத்து செல்கிறார்கள். கொடைக்கானலில் உள்ள வட்டகானலில் தொடங்கி சுமார் 6 கிமீ தூரம் நடந்தால் வெள்ளகவி என்ற அழகான மலை கிராமம் வரும். முன்பதிவு செய்து சென்றால், அங்கு இரவை கழித்து பாருங்கள். நடுமலையின் உச்சியில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் தங்குவது அற்புதமானஅனுபவமாக இருக்கும்,

மூணாறு கொழுக்குமலை: அடுத்ததாக மூணாறு சுற்றுலா சென்றால், கொழுக்குமலை போய் பாருங்கள். கொழுக்குமலை என்பது, தமிழ்நாட்டில் குரங்கணிக்கு மேலே அமைந்துள்ள மிக உயரமான தேயிலை தோட்டங்கள் ஆகும். அங்குள்ள பாறை ஒன்றின் உச்சியில் இருந்து தேனியின் மொத்த அழகையும் ரசிக்க முடியும். ஒருபக்கம் கேரளாவையும் மறுபக்கம் தமிழ்நாட்டையும் பார்க்க முடியும். அங்கு அதிகாலை சூரிய உதயத்தை பார்ப்பது என்பது அலாதியான அனுபவம் ஆகும். இதே போல் தேனி மூணாறு செல்லும் சாலையில் பயணிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.இந்த சாலையில் பயணிக்கவே சுற்றுலா செல்வோர் அதிகம் விரும்புவார்கள்.
செவன் ஏஞ்சல்ஸ் அருவி: ஊட்டிக்கு சுற்றுலா சென்றால், செவன் ஏஞ்சல்ஸ் அருவிக்கு போகலாம், இந்த அருவி ஊட்டியில் உள்ள அழகான அவலாஞ்சி ஏரியின் மறுகரையில் அமைந்திருக்கிறது. எனினும் இந்த செவன் ஏஞ்சல்ஸ் அருவிக்கு மழை காலங்களில் போக இயலாது. அவலாஞ்சி ஏரியில் தண்ணீர் குறைந்த பின்னர்தான் போக முடியும். டிரக்கிங் போக விரும்புபவர்களுக்கு இது ஓர் அருமையான இடமாகும். அதே போல் நீடில் ராக் பாயின்ட் என்ற இடத்திற்கு போய் வரலாம். அங்கு இரண்டு பக்கமும் பள்ளத்தாக்கு காணப்படும். எப்போதுமே சில்லென்று வீசும் காற்று, மலைகளில் தவழும் வெண் மேகங்கள், அமைதியான நீண்ட பாதை என மனதை நெகிழ வைத்துவிடும்.

கொல்லிமலை:நாமக்கல்லில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கொல்லிமலை பயணிப்பதற்கே அற்புதமான அனுபவம் உள்ள இடமாகும்.இந்த சாலையில் பயணிக்கவே சுற்றுலா செல்லலாம். அந்த அளவிற்கு பலருக்கும் பிடித்த இடம் ஆகும். இங்குள்ள அகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பது அற்புதமான அனுபவம் ஆக இருக்கும். ஆயிரம் படிக்கெட்டில் ஏறித்தான் பார்க்க முடியும். கொல்லிமலையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான படகு இல்லம் என்றால் வாசலூர்பட்டி படகு இல்லம் ஆகும். இது நகர மையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயற்கையாக அமைந்துள்ள ஏரியாகும். .

சென்னையை தாண்டி எங்குமே போகவில்லை.. சென்னையை சுற்றி ஏதாவது ஒரு இடத்திற்கு போக விருப்பம் உள்ளது என்றால், தாராளமாக ஈசிஆரில் வண்டியை விடுங்கள். முட்டுக்காடு செல்லுங்கள். அங்கு போட்டிங் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அடுத்ததாக அப்படியே வண்டியில் மகாபலிபுரம் போகலாம். அங்கு சிற்பங்களையும், கடலையும் ரசிக்கலாம். இல்லைப்பா எனக்கு இரவு தங்கி ஜாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா.. மகாபலிபுரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் புதுச்சேரிக்கு போய்விடலாம். அங்கு இரவு தங்கி, கடற்கரையை ரசித்தபடி என்ஜாய் பண்ணலாம்.

அதேநேரம் தேனி மற்றும் கோவைக்கு போகிறீர்கள் என்றால், நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள் தான் . அங்கு சுற்றி பார்க்க அத்தனை இடங்கள் உள்ளது. தேனியை சுற்றி வெறும் மேகமலை, கும்பக்கரை அருவி, கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி, வாகமன், குரங்கணி, சோத்துப்பாறை, சுருளி அருவி, சின்ன சுருளி அருவி, வேலப்பர் கோவில், அடுக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கோவையை பொறுத்தவரை கூப்பிடும் தூரத்தில் ஊட்டி, நீலகிரி, ஈஷா, சிறுவாணி அணை, கோவை குற்றாலம், வால்பாறை, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், உடுமலைப்பேட்டை, பழனி, உடுமலை வழியாக மூணாறு, டாப் ஸ்லிப், ஆழியாறு அணை, மருதமலை என பல இடங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications