விஜய் தங்க போகும் கொடைக்கானல் தாண்டிக்குடியில் உள்ள அற்புதமான சுற்றுலா இடங்கள்
கொடைக்கானல்: நடிகர் விஜய் தங்க போகும் கொடைக்கானல் தாண்டிக்குடியில் அற்புதமான சுற்றுலா இடங்களை பற்றி பார்ப்போம். குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம், வாட்ச் டவர், மருதா நதி அணை வியூ பாயிண்ட், வேல்யூ வியூ, புல்லாவெளி அருவி, பண்ணக்காடு முருகன் கோவில் என ஐந்து இடங்கள் உள்ளன. இதேபோல் பண்ணைக்காடு முதல் தாண்டிக்குடி வரை ஏராளமான அற்புதமான இடங்களும் உள்ளன.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய், ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி மலைப்பகுதியில் நடைபெற உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் விஜய் தாண்டிக்குடி மலைகிராமத்தில் தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். பின்னா் தாண்டிகுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். மே 2 மற்றும் 3, 4-ம் தேதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.படப் பிடிப்புகளை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி பகல் 12 மணி அளவில் தாண்டிக் குடியில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருக்கிறார்.

நடிகர் விஜய் தங்க உள்ள இடம் கொடைக்கானல் மலைப்பகுதி என்றாலும், கொடைக்கானலில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் தான் தாண்டிக்குடி வர முடியும். தாண்டிக்குடி அருகில் உள்ள முக்கியமான இடம் பண்ணைக்காடு ஆகும். பண்ணைக்காடு என்பது வத்தலக்குண்டு காட்ரோடு பிரிவில் இருந்து பிரதான சாலையை ஒட்டி மலையில் அமைந்துள்ள இடம் ஆகும். இந்த வழியாகவும் தாண்டிக்குடி போக முடியும்.
இல்லை என்றால் நேராக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து பட்டிவீரன்பட்டி வழியாக மலையில் ஏறி தாண்டிக்குடி வர முடியும். கொடைக்கானலில் கீழ்மலைப்பகுதியான தாண்டிக்குடி கடல் மட்டத்தில் இருந்து 3705 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தரையில் இருந்து கணக்கிட்டால் 1500 அடிக்குமேல் உயரத்தில் உள்ளது.இதனால் இங்கு ஆண்டு முழுவதும் காலநிலை ஓரளவு குளிர்ச்சியாகவே இருக்கும். கொடைக்கானல் அளவிற்கு இருக்காது என்றாலும், ஓரளவு நல்ல குளிரான கால நிலையே இருக்கும்.

தாண்டிக்குடி செல்லும் சாலையில் சித்தரேவு வரை சமவெளியாக இருக்கும். அடுத்து சித்தரேவில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் பழனிக்கும், கொடைக்கானலுக்கும் நடுவே தாண்டிக்குடி மலை கிராமம் உள்ளது. நான்கு புறங்களும் மலைப்பகுதியாக தாண்டிக்குடி இருக்கும். தாண்டிக்குடி அருகே மங்களம்கொம்பு, பன்றிமலை, பண்ணைக்காடு, தடியன்குடிசை உட்பட மலைப்பகுதிகள் வார இறுதி நாள் விடுமுறையில் பயணிப்போர் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இடங்கள் ஆகும்.
தாண்டிக்குடியில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் உள்ளது. ஆதிவாசிகளின் குகை ஒன்று உள்ளது. தாண்டிக்குடியில் இருந்து பாலமுருகன் கோவில் செல்லும் வழியில் ஆதிவாசிகள் வாழ்ந்த இடங்கள் உள்ளன. தாண்டிக்குடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அதேபோல் தாண்டிக்குடி அருகே உள்ள அரசன் கொடை பகுதியில் ஆதிவாசி மனிதர்களால் வரையப்பட்ட நாகரிகம், பண்பாடு, வேட்டையாடுதல் தொடர்பான அரிய வகையான பாறை ஓவியங்கள் உள்ளன.

புல்லாவெளி அருவி தாண்டிக்குடி வரும் பலருக்கும் பிடித்த இடம் ஆகும். சுற்றுவட்டார மலைப்பகுதியில் உருவாகும் சிறிய ஓடைகள் இணைந்து பெரும் அருவியாக வருகிறது. ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தில் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும்.
தாண்டிக்குடி மலைப் பிரதேசம் நறுமண பயிர்கள் அதிகம் விளையும் பகுதியாகும். மேலும் ஏராளமான மூலிகைச் செடிகளும் காணப்படுகின்றன. காபி இங்கு அதிகம் விளைகிறது. கீழாநெல்லி, கிராம்பு, ஆடாதொடை, கற்றாழை, பெரியநங்கை என பலவித மூலிகைகளும் இங்கு விளைகிறது. தாண்டிக்குடி அருகே உள்ள பண்ணைக்காடு முருகன் கோவில் 2000 வருடம் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.

இதேபோல் தாண்டிக்குடியில் மருதாநதி அணை வியூ பாயிண்ட் உள்ளது. இது தாண்டிக்குடிக்கு வரும் வழியிலேயே உள்ளது. இது மலையை ரசிக்க விரும்புவோருக்கு பிடிக்கும். இதேபோல் கதவுமலை நாதன் கோவிலும் தாண்டிக்குடி செல்வோர் விரும்பி செல்லும் இடம் ஆகும்.












Click it and Unblock the Notifications