ஊட்டிக்கு டூர் போறீங்களா.. கண்டிப்பாக இதை பாருங்க.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்
சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா.. கண்டிப்பாக இதை பாருங்க.. ஏனெனில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை குறித்த அறிவிப்பில், "குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று 16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்பு இருக்கிறது.

18.01.2024 முதல் 20.01.2024 வரை; தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.21.01.2024 மற்றும் 22.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: 16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஓட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஊட்டிக்கு வருவோம்.. பொதுவாக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டம் முழுவதும் மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். வழக்கத்தை விடவும் குளிர் மிக அதிகமாக இருக்கும். குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் என்பதால் டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருக்கும் . அதேநேரம் ஜனவரி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் எண்ணிகை அதிகரிக்கும்.
குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கிடுகிடுவென சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் பனியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா வருவார்கள. நீலகிரி மாவட்டத்திற்கு ஹனிமூன் ஜோடிகள் அதிக அளவில் வருவார்கள். குறிப்பாக மார்கழி மற்றும் தை மாதங்களில் அதிகமாக வருவார்கள். அந்த வகையில் தற்போது ஹனிமூன் ஜோடிகள் குவிந்து வருகிறார்கள். அதேநேரம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் பலரும் ஊட்டிக்கு போக திட்டமிட்டிருப்பார்கள். அவர்கள் அறிய வேண்டியது இந்த வானிலையை பற்றித்தான்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பதால் அதற்கு முன்னேற்பாடாக செல்வது நல்லது. கடும் குளிர் இருக்கு என்பதால், ஜன்னலை திறந்தபடி பயணிப்பது சிலருக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரம் உறைபனியை ரசிக்க பலரும் வருவார்கள் என்பதால் , இன்று முதலே கூட்டம் அதிகமாகவே இருக்கும். நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் கடுமையாக கூட்டம் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications