கோவா ஆசை நிறைவேறலயா? கன்னியாகுமரி அருகே சூப்பர் ஸ்பாட்.. 4 மணி நேரம்தான்! வர்கலாவில் என்ன ஸ்பெஷல்?
திருவனந்தபுரம்: பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து கோவா செல்ல பிளான் போட்டு கடைசி வரை செல்ல முடியாமல் இருக்கும் லட்சக்கணக்கான 90ஸ் கிட்ஸ்களில் ஒருவரா நீங்கள்? அட்லீஸ்ட் இந்த இடத்துக்காவது போயிருங்க..
பள்ளி, கல்லூரி படிக்கும்போது அழைத்து செல்லப்படும் சுற்றுலாக்களில் கோவாவுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசை 90ஸ் கிட்ஸுகள் பலருக்கும் இருந்திருக்கும். ஆனால், இன்று வரை பலருக்கு அந்த ஆசை நிறைவேறி இருக்காது. இதற்கு பொருளாதாரம், பெற்றோர், ஆசிரியர் அனுமதி, பயண நேரம், விடுமுறை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
படித்து முடித்து பணிக்கு சென்ற பிறகும்கூட விடுமுறை கிடைக்காததால் கோவா பயணம் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. காரணம் தமிழ்நாட்டில் இருந்து கோவா செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது விடுமுறை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடினம்தான்.

பொருளாதாரம் இருந்தும் இதனால் பலரால் கோவாவுக்கு செல்ல முடியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரு இடம் தென் இந்தியாவில், அதுவும் நமது கன்னியாகுமரிக்கு அருகிலேயே அமைந்து உள்ளது. ஆம், அதுதான் வர்கலா. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 51 கிமீ தொலைவிலும், கொல்லத்தில் இருந்து 31 கிமீ தொலைவிலும் அமைந்து உள்ளது இந்த அழகிய கடற்கரை நகரம்.

வட இந்தியாவுக்கு கோவா என்றால் தென் இந்தியாவுக்கு எங்கள் வர்கலா என்று பெருமையோடு மலையாள சேட்டன்கள் மார்தட்டி சொல்லும் அளவுக்கு அங்கு அப்படி என்னதான் இருக்கிறது? வேறென்ன இயற்கை நமக்களித்த அனைத்து பொக்கிஷங்களையும் உள்ளடக்கிய பொழிவான நகரம்தான் வர்கலா. குறிப்பாக அங்குள்ள கடற்கரை உங்கள் மனதை மகிழ்விக்கும்.

வரலாற்று சிறப்பம்சங்களை எக்கச்சக்கமாக கொண்டுள்ள வர்கலாவை சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது. அந்தளவுக்கு நம்மை புத்துணர்ச்சியூட்டும் பல விசயங்கள் அங்கு இருக்கின்றன. ஏராளமான அழகிய கடற்கரையை கொண்டு உள்ள கேரள மண்ணில் உள்ள பெஸ்ட் கடற்கரை என்றால் வர்கலாவை செல்லலாம்.

அரபிக் கடலின் வாசம் மூக்கை துளைக்க, மலையாள மண்ணின் பாசம் ஆளை மயக்கும். மிக மிக தூய்மையான தெளிவான கடல்நீரை கொண்டுள்ள வர்கலாவில் மாலை நேரம் சூரியன் மறையும் காட்சியை காண்பதே தனி சுகம்தான். இங்கு மலையை ஒட்டி அமைந்திருக்கும் கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு சன் பாத் எடுக்கலாம்.

வர்கலாவில் பாபநாசம் கடற்கரை, பிளாக் பீச், ஓடயம் கடற்கரை, கப்பில் பீச் என 4 கடற்கரைகள் உள்ளன. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர்கலாவில் சன் பாத் எடுப்பதற்காக வருகை தருகிறார்கள்.

அதேபோல் வர்கலா லைட் ஹவுசும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் சுற்றுலா தலமாக உள்ளது. அதன் மீது ஏறி நின்று பனை மரங்களின் அழகையும், அங்குள்ள கிராம வாழ்கையை பறவையின் பார்வையில் ரசிக்கலாம். ஆனால் மாலை 3 முதல் 5 மணி வரை மட்டுமே வர்கலா கடற்கரை திறந்திருக்கும்.

கோவாவை போன்றே வர்கலாவிலும் ஹிப்பி கலாச்சாரம் உள்ளது. அங்கு ஜாலியாக ஷாப்பிங் செய்து வகை வகையான ஹிப்பி பொருட்களை வாங்கலாம். வாங்காவிட்டாலும் வேடிக்கை பார்க்கலாம். இன்னும் கேரளாவின் அழகை நீங்கள் ரசிக்க விரும்பினால் வர்கலாவில் இருந்து பேருந்தில் திருவனந்தபுரத்துக்கு நீங்கள் செல்லலாம். பேருந்து, ரயில் வசதிகளும் உள்ளன. ஒருநாள் பயணமாக கொல்லத்திற்கும் சென்று வரலாம். வாடகை மோட்டார் பைக் வசதியும் உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 116 கிலோ மீட்டர் தொலைவில் வர்கலா அமைந்து உள்ளது. 4 மணி நேரத்திற்குள் வர்கலாவுக்கு சென்றடைந்துவிடலாம். கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று இருப்பவர்கள், ஒருநாளாவது வர்கலாவுக்கு சென்று வாருங்கள். ஒரு புது அனுபவத்தை பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications