சென்னை நகருக்குள் உள்ள இரண்டு அழகான காடுகள்.. வார இறுதியில் சூப்பர் பயணத்திற்கு ஏற்ற இடம்
சென்னை: வார இறுதியில் சுற்றி பார்க்க விரும்புவோருக்கு சென்னைக்குள்ளேயே இரண்டு அழகான காடுகள் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சென்னை நகருக்குள் இரண்டு அழகான வனப்பகுதிகள் உள்ளன. எவ்வளவு வெயில் அடித்தாலும், குளுகுளுவென இருக்க விரும்புவோர் போய் பாருங்கள்.
வங்ககடலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியான சென்னை வெப்பமான நகரமாகும்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய கான்கிரீட் காடு என்றால் அது சந்தேகமே இல்லை.. சென்னை தான்... சென்னையில் பசுமையான மரங்களையோ காடுகளையோ பார்ப்பது அபூர்வமாக உள்ளது. ஒரு காலத்தில் ஏரிகளின் நகரமாக இருந்த சென்னை, இன்று ஏரிகளை அழித்த காரணத்தால், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வெள்ளப்பிரச்சனையால் தவிக்கின்றன.

சென்னையில் வெயில் காலம் தொடங்க போகிறது. இப்போதே சென்னையில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகவே இருக்கிறது. சென்னையில் உள்ள பலரும் கோடைவாசல் தளங்களை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். சென்னையில் வசதி படைத்தவர்கள் சர்வசாதாரணமாக கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற கோடைவாசல் தளங்களுக்கு சென்றுவர முடியும். ஆனால் சாமானிய மக்களால் முடியாது. அதேநேரம் சென்னையிலும் வெயிலே தெரியாத அளவிற்கு அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அதுவும் சென்னைக்குள்ளயே காடுகள் இருக்கின்றன. அந்த இரண்டு அழகான காடுகளை பற்றி இப்போது பார்ப்போம்.
கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்த ஒரு இடம். இரவுகளை கிழக்கு கடற்கரைகளில் கழிக்கலாம் என்றால், பகலில் கிண்டி சிறுவர் பூங்காவை ஒட்டியுள்ள காட்டிற்கு பயணிக்கலாம். இந்த காட்டில் சிறு உயிரினங்களை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். அந்த காட்டிற்குள் ஒரு பெரிய குளம் ஒன்று உள்ளது. அதையும் ரசிக்கலாம். ஆனால் கிண்டி காட்டிற்குள் உள்ளே செல்ல முறையான அனுமதி வாங்க வேண்டும். காட்டிற்குள் சென்று மான், நரி, இரலை, அலங்கு, கீரி எண்ணற்ற உள்நாட்டு-வெளிநாட்டுப் பறவைகளை நீங்கள் ரசிக்கலாம்.
மேலும் இயற்கையை ரசித்தபடி நடந்து செல்வோருக்கு சொர்க்கமான இடம் ஆகும்,., அதேநேரம் உயரத்தில் சென்று பார்ப்பதற்கு ஏற்றாற்போல் உயர் கோபுரமும் உள்ளது. முழுமையான, மனநிறைவுடன் நடந்து சுற்றி வருவதற்கு ஏற்ற இடமாக கிண்டி காடு இருக்கிறது. அதேநேரம் கிண்டி காட்டிற்குள் போகும் போதே தண்ணீர் பிஸ்கட் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக வாங்கி செல்லுங்கள். ஏனெனில் உள்ளே எதுவும் இருக்காது. வெயில் காலத்தைவிட பிப்ரவரி மாதமான இப்போது கிண்டி காடு சுற்றிபார்த்து ரசிக்க அற்புதமான தருணம் ஆகும்.
கிண்டி காட்டிற்கு அடுத்தபடியாக சூப்பரான இடம் என்றால், நன்மங்கலம் காடு. மேடவாக்கத்தை அடுத்து இந்த காடு தொடங்குகிறது. தாம்பரம் செல்லும் வழியில் காட்டிற்கு உள்ளே செல்லும் வழி இருக்கிறது. ஆந்தைகளைப் பார்க்க விரும்புவோர் இந்த காட்டிற்கு பயணிக்கலாம் என்கிறார்கள் இங்கு போய் வந்த சுற்றுலா பயணிகள். நன்மங்கலம் காடு மிகவும் பரந்துவிரிந்து காணப்படுகிறது. காடுகளில் நீண்ட நடை சென்று வருவோருக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். கான்கிரீட் காட்டில் வாழும் சென்னை மக்கள் தூயகாற்றை சுவாசிக்க இந்த காடுகள் பேருதவியாக உள்ளன. இந்த இரண்டு காடுகளை தவிர தாம்பரத்தில் உள்ள மலையும், வண்டலூர் பூங்காவுமே சிறப்பான இடம் ஆகும். தாம்பரம் மலையில் ஏறி சுற்றி பார்த்தால் சென்னை மாநகரம் முழுமையாக தெரியும். வண்டலூரை பொறுத்தவரை அனைவருக்கும் தெரிந்த இடம். அங்கு எல்லா விலங்குகளையும் சுற்றி பார்க்கலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால் போக்குவரத்து வசதி எளிதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications