மூணாறு போகலாமா.. தேனி வழியாக 'இப்ப' போய் பாருங்க.. போடிமெட்டில் இருக்கு வேறலெவல் சர்ப்ரைஸ்
தேனி: மூணாறு போகலாமா.. ஏற்கனவே போயிருந்தாலும் பரவாயில்லை.. இப்ப போய் பாருங்க.. தேயிலை தோட்டங்களுக்கு ஊடாக போடி மெட்டு முதல் மூணாறு வரை உள்ள புதிய சாலைக்காகவே ஒருமுறை நிச்சயம் போய் வரலாம். மலையில் இப்படியும் சாலை அமைக்க முடியுமா என்கிற அளவில் மத்திய அரசு அமைத்திருக்கிறது.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா... அது என்நாடும் என்றாலும்.. நம் நாட்டுக்கு ஈடாகுமா என்று எப்போதோ தனது சொந்த ஊரான தேனியை பற்றி, எப்போதோ பாடிவிட்டார் இசைஞானி இளையராஜா.. அவர் பாடியது போலவே நிச்சயமாக தேனி சொர்க்கம் தான்.. அதுவும் போடி மெட்டு வழியாக மூணாறு போவது என்பது கொள்ளை அனுபவம் ஆக இருக்கும்.

என் இனிய தனிமையே என்று பைக்கை எடுத்துக்குக் கொண்டு கிளம்புபவர்களுக்கும், புதிதாய் அதிகாலையோ புகை சூழும் நெடுஞ்சாலையோ என்று தோழியுடன் சென்றாலும் சரி.. இப்படி சாலையில் பயணிக்கவே மூணாறு கிளம்பலாம்.. தேனியில் இருந்து எந்த பிசிறும் இல்லாத தரமான சாலை மூணாறு வரையிலுமே இருக்கும்.
குறிப்பாக மோடி மெட்டு கடந்து கேரளாவை தொட்டுவிட்டால் தேயிலை தோட்டங்கள் உங்களை கண்களை விருந்தாக்கும்.. ஒரு பெண்ணை காதலித்தவர்களை விட... இயற்கையை காதலித்தவர்கள் அதிகம் என்பது நிசதர்சமான உண்மை.. அதை உங்கள் மனம் ஏன் இந்த ஊரில் பிறக்காமல் போனோம் என்று ஒருமுறையாவது உங்களை கேட்காமல் விடாது. கடவுளின் தேசமான கேரளாவை பொறமைப்படும் ஊர் என்றால் அது மூணாறு தான். போடி மெட்டை கடந்து நீங்கள் பயணிக்கும் போது பள்ளத்தாக்காக இருக்கும். அப்படியே 7 கிமீ பயணித்தால் பூப்பாறை வந்துவிடும்.
இந்த சாலைகள் நன்றாக அகலமாகவே இருக்கும். இரு பேருந்துகள் சர்வ சாதாரணமாக போக முடியும். மழைநீர் வடிகால்கள் சாலையோரம் இருக்கும் சாலையும் தரமாக இருக்கும். பூப்பாறையில் இருந்த அப்படியே மீண்டும் மேலே ஏறிச் செல்ல வேண்டும். ஆனையிரங்கலை தாண்டி போகும் போதே உங்கள் முகமெல்லாம் பூரித்து போகும். புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையில் பயணிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அடுத்த அரைமணிநேரத்தில் மூணாறை தொட்டுவிடலாம். அதன்பிறகு உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு போகலாம். மூணாறில் 100 ரூபாய் செலுத்தி ஏசி பேருந்தில் இரவில் தங்கி கொள்ளும் திட்டம் இருக்கிறது. அந்த முறையில் தங்கி கொள்ளலாம்.இல்லை நான் லாட்ஜில் தான் தங்குவேன் என்று நீங்கள் விரும்பினால் நேரில் போய் பார்த்து விசாரித்தால் குறைவான லாட்ஜ்கள் நிறையவே இருக்கும். தங்கி சுற்றி பார்க்கலாம்.
மூணாறை பொறுத்தவரை பலருக்கும் மாட்டுப்பட்டி அணை முதல் டாப் ஸ்டேசன் வரை உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் தெரியும். அதன்பிறகு வட்டக்கானலில் உள்ள கொடைக்கானல் சாலையை பற்றி தெரியாது.அங்கு கேரள போலீசாரே தங்கள் வாகனத்தில் டிரெக்கிங் கூட்டி செல்கிறார்கள். அது சிறப்பான அனுபவமாக இருக்கும்.
சரி, மற்றொரு முக்கியமான விஷயத்தை இப்போது குறிப்பிட்டாக வேண்டும். ஏன் இந்த செய்தியில் சாலையை பற்றியே அதிகம் கூறினேன் என்றால், இந்த புதிய சாலை வெளி நாட்டில் பயணிப்பது போன்ற ரம்மியமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவத்தை தரும். வரும் அக்டோபர் 12ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த சாலையை திறந்து வைக்க உள்ளார்.
தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தான் மூணாறு இருக்கிறது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி, 2017-ல் தொடங்கியது. போடிமெட்டு - மூணாறு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள மலைச் சாலை ரூ.381.76 கோடி மதிப்பீட்டில் அகலப் படுத்தும் பணி அப்போது தொடங்கியது.
இந்நிலையில் லாக்கார்டு எனும் பகுதியில் உள்ள மலையை தகர்த்த போது, அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த சாலையை அகலப்படுத்துவதில் பல ஆண்டுகள் தாமதம் ஆனது. இந்நிலையில் இப்பணி முழுமை அடைந்து தற்போது சாலை வேறலெவலில் இருக்கிறது. இந்த சாலையை அமைக்க கடினமான உழைப்பு மட்டுமல்ல, பல பேர் உயிரை பறிக்கொடுத்துள்ளார்கள் என்பதும் கசப்பான உண்மை. கடந்த சில ஆண்டுகளாக மூணாறுக்கு பூப்பாறை போய் ராஜாகுமரியை சுற்றித்தான் போக வேண்டியதிருந்தது. புதிய சாலை காரணமாக விரைவாகவே மூணாறு போய்விட முடியும்.ஒருமுறை போய் பாருங்கள்.நீங்கள் அந்த அனுபவத்தை உணருவீர்கள். முக்கியமான இன்னொரு விஷயம், இந்த புதிய சாலையில் தேவிகுளம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. சுங்க கட்டணம் விரைவில் செலுத்த வேண்டியது வரலாம்.












Click it and Unblock the Notifications