குற்றாலம் போக ரெடியா.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. இன்று வேறலெவல்ல இருக்கே.. வீடியோ பாருங்க
தென்காசி: தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு ஜூன் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சரியாக பெய்யவில்லை. இதனால் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய குற்றால சீசன் தொடங்காமல் இருந்தது. இதனால் குற்றாலத்தை வாழ்வாதாரமாக நம்பி இருந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கியதுமே குளு குளு சீசனும் மழையும் குற்றலாத்தில் ஆரம்பித்துவிடும். ஆனால் ஜூன் மாதம் முழுவதுமே தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியது.ஜூலையில் அப்படி இல்லை, மாதம் பிறந்த உடனேயே மழை கொட்டத் தொடங்கியது. கேரளாவில் மழை வெளுத்து வாங்கியது. தென்காசி மற்றும் குற்றலாம் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.
குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடந்த இரு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகளை குளிக்க காலையில் தடை விதித்த வனத்துறையினர், மாலையில் குளிக்க அனுமதித்து வந்தார்கள்.
இந்நிலையில் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று குளிக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். இன்று (ஜூலை 8) காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்து. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
தொடர்ந்து சாரல் மழையும், வெயிலும் மற்றும் இதமான காற்றும் வீசி வரும் குற்றாலத்திற்கு இன்றும் நாளையும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாளை ஞாயிறு என்பதால் மக்கள் அதிகம் பேர் குற்றாலம் வருவார்கள்.
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கிறார்கள். குற்றாலத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை இனி வழக்கத்தை விட அதிகரிக்கும்.
நேற்று (7.7.2023) முதல் குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. குற்றாலம் போனீங்க என்றால், மெயின் அருவி பகுதியில் அறையை எடுத்து தங்கி கொள்ளலாம். உணவு சமைத்து பரிமாறுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு தேவையானது மூன்று வேளையும் சமைத்து தருவதற்கு பேசிக்கொள்ளலாம்.
காலையில் வந்த உடனே குளித்து விட்டு கறிக்குழம்புடன் இட்லி உள்ளிட்ட வகைகளை சாப்பிட்டுவிட்டு மீண்டும்குளிக்க கிளம்பிவிடலாம்.பழைய குற்றாலாம், ஐந்தருவி, புலி அருவி என ஒவ்வொரு இடத்திற்கும் போய் குளிக்க சாப்பிட, குளிக்க சாப்பிட என்று என்ஜாய் செய்தால் அந்த நாள் இனிமையாக இருக்கும். இரவிலும் போய் அருவியில் குளிக்கலாம். அந்த அனுபவம் அலாதியானது. குறைந்தது இரண்டு நாள் இருந்து குற்றாலத்தை சுற்றினால் சூப்பராக இருக்கும்.
குற்றாலத்தில் அருவிகளை தாண்டி பல்வேறு இடங்கள் உள்ளன. மணிமுத்தாறு, பாம்பு காரையாறு படகு சவாரி, பாம்பு பூங்கா, தனியார் அருவி என பல இடங்கள் இப்போது உள்ள சீதோஷண நிலையுடன் என்ஜாய் செய்தால் இனிமையாக இருக்கும். இறுதியாக மூன்றாவது நாள் பாபநாசம் சென்று வரலாம். அப்படியே திருச்செந்தூர் போய் வரலாம் அல்லது கன்னியாகுமரி போய் வரலாம்












Click it and Unblock the Notifications