தருமபுரியில் ஒரு குட்டி ஊட்டி! பட்ஜெட் பிரெண்ட்லி! ஆரஞ்சு பழமெல்லாம் விளையுதுங்க! குளுகுளு வத்தல்மலை
தருமபுரி: என்ன வெயில் தாங்க முடியவில்லையா, குறைந்த பட்ஜெட்டில் குளு குளுனு "ஊட்டிக்கு" போகலாமா? ஊட்டி இல்ல ஊட்டி மாதிரி!
கோடை வெயில் மார்ச் மாதமே சுட்டெரிக்கிறது, இன்னும் ஒரு மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதனால் இப்போதே கோடை காலத்தில் குளு குளு என இருக்கும் இடங்கள் என கூகுளில் போட்டு தேடி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் டூர் பிளாகர்களின் வலைதள பக்கங்களிலும் பட்ஜெட் பிரெண்ட்லி என்ற வார்த்தையை போட்டு நிறைய பேர் தேடி வருகிறார்கள். தமிழகத்தில் சுற்றுலா என எடுத்துக் கொண்டால் இதுவரை பிரபலமாகாத நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன.
பொதுவாக இயற்கையான குளுகுளு தன்மை நிறைய இடங்கள் என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்றவைதான். இங்கெல்லாம் பசுமையான மரங்கள், சூரிய ஒளி புகாத காடுகள், மனதிற்கு இதமான காலநிலை இருக்கும். எனவே இந்த இடங்களை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அடிக்கும் ஊர் மக்கள் விரும்புவார்கள்.
ஆனால் இது போன்ற வசதிகளுடன் கூடிய இடம் தருமபுரி மாவட்டத்தில் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? என்னாது தருமபுரியிலா, அங்கும் கோடை வெயில் கொப்பளிக்குமே, அங்கு எப்படி என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. தருமபுரி நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வத்தல்மலை. இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த மலையில் சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, குழியனூர்- பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு பூமரத்தூர் அடிவாரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவுக்கு 15 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைப்பாதை அமைக்கப்பட்டது.
இங்குள்ள மக்களின் முதன்மைத் தொழி விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இங்கு தினை, கேழ்வரகு, சாமை, கடுகு, அவரை போன்ற பயிர்களை விளைவிக்கிறார்கள். அது போல் காபி, ஆரஞ்சு, மிளகு, சில்வர் ஓக் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இங்கு நிறைய அருவிகள், பள்ளத்தாக்குகளும் இருப்பதால் இங்கு ஆண்டுதோறும் மக்கள் சென்று வருகிறார்கள்.
அதிலும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை செல்வது சிறப்பாக இருக்கிறது. இங்கு மலைகளுக்கு நடுவே வயல்வெளியை காணலாம். பைக் ரைடு செல்ல நினைப்பவர்களுக்கு மிகவும் நல்ல ஸ்பாட் இதுதான். அது மட்டுமல்லாமல் இந்த இடத்திற்கு செல்ல அரசு பேருந்துகளும் ஒரு நாளைக்கு 3 முறை நிறுத்தப்படுகிறது.
என்ன கண்களுக்கு விருந்தாக அமைந்தாலும் வயிற்றுக்கு விருந்து கிடைக்காது. இங்கு ஹோட்டல்கள் ஏதும் இல்லை. எனவே உணவை வாங்கிக் கொண்டு அங்கு அருவிகளையும் பச்சை பசேல் வயல்களையும் ரசித்தபடியே சாப்பிடலாம். இந்த இடம் 2011ஆம் ஆண்டுதான் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது.
படகு சவாரியெல்லாம் இல்லாவிட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் சாய்ந்து புத்துணர்ச்சியை பெறுவதே புதுவித அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு ஹேர்பின் வளைவு பகுதிகளிலும் நல்ல வியூபாயிண்ட் இருக்கும். இங்கு நிறைய அருவியில் இருக்கின்றன. இங்கெல்லாம் குளிக்க மறக்காதீர்கள்.
இங்கு விரைவில் படகு குழாம், பூங்கா, தங்குமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மிகப் பெரிய சுற்றுலா தலமாகும் என தெரிகிறது. எனவே தற்போது இந்த அனுபவத்தை குறைந்த செலவில் அனுபவித்து வாருங்கள்.












Click it and Unblock the Notifications