இப்ப போங்க ஜோடியா.. ஏற்காட்டில் அறிமுகமான ஸ்பெசல் விஷயம்.. உற்சாகமான சுற்றுலா பயணிகள்
சேலம்: ஜோடியாக ஏற்காடு போக ஆசையா.. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக படகு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் அமர்ந்து தாங்களாகவே மிதிவண்டியை மிதித்து செல்லலாம்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஏற்காடு. இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் (4969 அடி) உயரத்தில் உள்ளது. கொடைக்கானல், ஊட்டி, மேகலை,வால்பாறை போன்ற சுற்றுலா தளங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நிலையில், கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலை வாசல் தளங்களில் ஏற்காடு முக்கியமானது.

கொடைக்கானல், ஊட்டி போல் கிளைமேட் இருக்காது என்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி போன்ற மாதத்தில் மிக அருமையாக இருக்கும். மற்ற காலங்களில் மிதமான வெப்ப நிலை இருக்கும். ஏப்ரல், மே போன்ற கோடைகாலங்களில் வெயில் தாக்கம் பெரிதாக இருக்காது . ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.
சேலம் நகரில் இருந்து மிக மிக அருகில் இருப்பதால் மக்கள் எளிதாக சென்று வருகிறார்கள். ஏற்காட்டில் அமைந்துள்ள ஏற்காடு ஏரி சிறப்பான சுற்றுலாதளம் ஆகும்.இதுதவிர பகோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, கிள்ளியூர் அருவி, மான் பூங்கா
கொட்டச்சேடு தேக்குமரக்காடு, ரோஜா தோட்டம் , பட்டு பண்ணை,ஸ்ரீ சக்ர மகாமேரு கோவில் போன்றவை அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலையில் ஏறுவதே அருமையாக இருக்கும். அடர்ந்த மரங்களும்காடுகளும் வெப்பத்தை தடுத்து இதமான கால நிலையை நம்மை அனுபவிக்க வைக்கும்.

ஏற்காட்டில் சுற்றுலா வரும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக படகு இல்லம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். இங்குள்ள பல வகையான படகுகளில் பயணிப்பது அலாதியானது.ல் குறிப்பாக 5 துடுப்பு படகு, தாங்களே இயக்கக்கூடிய 30 மிதிபடகு, 10 பேர் அமர்ந்து ஒன்றாக செல்லக்கூடிய 6 மோட்டார் படகு ஆகியவற்றில பயணித்தால் சூப்பராக இருக்கும். இதில் குழந்தைகளை கவரும் விதமாக மிக்கி மவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகுகள் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லத்தில் கூடுதலாக ஒரு படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் அமர்ந்து தாங்களாகவே மிதிவண்டியை மிதித்து செல்ல முடியும். இந்த படகு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்தே கூடுதல் படகுகள் படகு இல்லத்துக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த படகில் சவாரி செய்யும்போது முழங்கால் வலி ஏற்படாமல் இருக்க உயரத்தில் அமர்ந்து மிதிவண்டியை மிதித்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் கூட இதை எளிதாக இயக்க முடியும். என்ன மக்களே நீங்களும் ஏற்காடு போக ரெடியா..












Click it and Unblock the Notifications