தேனி மேகமலையில் மேஜிக்.. எல்லாம் மகாபிரபுவின் மகிமைதான்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வாயில் எச்சில் வற்றிப்போய்.. தண்ணீரும் தொண்டையில் நீர் சுரக்காமல் சுருண்டு விழுந்தவருக்கு பக்கத்தில் திடீரென ஊற்று சுரந்தால் எப்படி இருக்கும்... அப்படித்தான் தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அங்கு மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்தது.. இதனால் சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
பட்டினியில் கிடந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போல் ஒரே நாளில் மாறி இருக்கிறது தேனி மாவட்டம். மேகமலை பகுதியில் பெய்த மழையால் சின்ன சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டத்தில் ஏரளமான அருவிகள் உள்ளன. தற்போது தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு போய் கிடக்கின்றன.. முல்லை பெரியாற்றிலும் தண்ணீர் மிகமிக குறைவாக வருகிறது. வராகநதி, பாம்பாறு, மஞ்சளாறு, கொட்டக்குடி ஆறு, வரட்டாறு, வைகை ஆறு, சோத்துப்பாறை, கல்லாறு எல்லா ஆற்றிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாக உள்ளது.. சில ஆற்றில் தண்ணீர் வரத்தே இல்லாத நிலை இருக்கிறது.

மழை இல்லாமல் வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருப்பதால் தேனி மாவட்ட மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள்.எந்த வருடமும் இப்படி ஒரு வெயில் அடித்தது இல்லை என்று தேனியில் கூறாதவர்களே இல்லை.. பொதுவாக தேனி மாவட்டத்தில் ஏப்ரல் இறுதி தொடங்கி மே மாதம் வரை அடிக்கடி வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.
கோடை மழையால் அதிக பலன் பெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. கோடை காலங்களில் மழை காரணமாக ஆறுகளிலும் அருவிகளிலும் நீர் வரத்து அருமையாக இருக்கும். கடந்த முறை அப்படித்தான் இருந்தது. இந்த முறை அப்படியே எதிர்மாறாக இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை.. இந்நிலையில் அண்மையில் பெய்த மழை நல்ல மாற்றத்தை உண்டாக்கி உள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில் 'சின்ன சுருளி' என்று அழைக்கப்படும் மேகமலை அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து வரும். மேகமலையில் பெய்யும் மழை, கம்பம் கூடலூர் பக்கம் உள்ள சுருளி பக்கமும், வருசநாடு பக்கம் உள்ள சின்ன சுருளி பக்கமும் வெள்ளமாக வழிந்தோடும். மழை காலங்களில் இருபக்கமும் உள்ள சுருளி, சின்னசுருளி அருவிகளில் தண்ணீர வழிந்தோடும்.
இந்த அருவிகளில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக மேகமலை அருவி நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.
இதன் காரணமாக சுருளி மற்றும் சின்ன சுருளி அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேகமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நேற்று மாலை சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.
தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சினன சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்து. இதனால் வரும் நாட்களில் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருவியில் நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications