எச்சரிக்கையை மதிக்காதது.. ஓவர் டூரிசம்.. கேரளாவின் வயநாட்டை எப்படி மோசமாக்கியது?
வயநாடு: ஓவர் டூரிசம் தான் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவை மோசமாக்கி உள்ளது. பல எச்சரிக்களை புறக்கணித்து சுற்றுலாவிற்காக வயநாடு மாவட்டத்தை மிகப்பெரிய அளவில் மாற்றியது தான் இன்றைய நிலைக்கு காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அசுர வளர்ச்சிக்காக சென்னை என்னவெல்லாம் தவறு செய்ததோ, அதே போன்று தவறுகளை வயநாடு அசுரத்தரமான சுற்றுலா வளர்ச்சிக்காக செய்துள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தை போலவே கேரளாவின் வயநாடு மாவட்டமும் சுற்றுலாவில் மிகவும் பிரபலமான பகுதியாகும். தென்னிந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு அடுத்த படியாக அதிகம் விரும்பும் இடமாக வயநாடு இருக்கிறது. இங்கு மூடுபனியை வெள்ளை உடையாக கொண்ட பச்சை பசேலென காட்சியளிக்கும் செங்குத்தான மலைகளும், ஆளை மயக்கும் பாறைகள், அந்த வழியாக ஓடும் ஓடைகளும், அந்த அருகிலேயே இருக்கும் மிக உல்லாசமான சொகுசு விடுதிகளும் வயநாட்டின் அடையாளம் ஆகும். இங்கு நிலவும் தட்பவெப்ப நிலையும், மலையும் மழையும், சுற்றுலா பயணிகளை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லும் வல்லமை உடையவை.

ஆனால் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை இரண்டு நிலச்சரிவுகள் பல ஆண்டுகள் பழமையான பல்வேறு சொகுசு விடுதிகளையும், பாலங்களையும், பல பழமையான கட்டிடங்களையும் மொத்தமாக அழித்து விட்டன. வரலாற்றில் இல்லாத வெள்ளமும், நிலச்சரிவும் ஒரே நேரத்தில் தாக்கியதால் இதுவரை சந்திக்காத பேரரிடரை கேரளா சந்தித்துள்ளது. வயநாட்டில் உள்ள முண்டக்கை கிராமத்தை மொத்தமாக வாரிசுருட்டி சென்றுவிட்டது வெள்ளம். நிலச்சரிவு காரணமாக அங்கிருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்து போனார்கள். முண்டக்கை மற்றும் சூரல் மலை நிலச்சரிவில் 300 பேர் வரை இறந்துள்ளனர். இன்னும் 500க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதனால் ஓரளவு சுற்றுலா பயணிகள் தப்பி விட்டனர். ஆனால் சுற்றுலாவிற்காக மொத்தமாக அடையாளத்தை மாற்றிக் கொண்ட வயநாடு, ஓவர் டூரிசத்ததால் இப்போது வாழ்நாளில் சந்திக்காத பேரழிவினை சந்தித்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழக்க ஓவர் டூரிசம் தான் காரணம் என்கிறார்கள் சுற்றுலா ஆர்வலர்கள்.

சுற்றுலாத் துறையின் அசுர வளர்ச்சி தான் வயநாட்டின் இன்றைய பேரழிவுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை வானிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் அசாதாரணமானது அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது. கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த வாரம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மிக மோசமானவையாகும்.
மண்சரிவினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியான முண்டக்காய் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வந்தன. இதுதவிர அண்டை கிராமங்களில் ஏறக்குறைய 700 ரிசார்ட்டுகள், ஹோம்ஸ்டேகள் மற்றும் ஜிப்-லைனிங் நிலையங்கள் இருந்தன. இந்த இடங்கள் மலையேறுபவர்கள், தேனிலவுக்கு வருபவர்கள் மற்றும் இயற்கையை காதலிக்கும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. இந்த பகுதி முழுமையாக ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலைப் பகுதிகள் ஆகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை பேரழிவு வருவதை பல ஆண்டுகளாகவே எச்சரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர், கடந்த 13 ஆண்டுகளில் அரசின் பல சுற்றுச்சூழல் அறிக்கைகளை எடுத்து பார்த்தால், அதிகப்படியான சுற்றுலா வளர்ச்சிக்காக செய்யப்படும் கட்டுமானங்கள், நிலச்சரிவு மற்றும் இயற்கை நீர் ஓட்டங்களைத் தடுக்கும் என்றும், வெள்ளம் போன்ற பிற சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றே கூறியுள்ளன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதாவது அதிகாரத்துவ சண்டையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமயமலையை பொறுத்தவரை நிலச்சரிவுகள் அபாயம் மிகவும் அதிகம். அங்கு எளிதாக பாதைகள், மலைகள் எல்லாமே உடைந்து விடும். அப்படிப்பட்ட சூழலில் அங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தென்னிந்தியாவிலுமே பல்வேறு மாநில அரசுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் முடிந்தவரை சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்தி வந்துள்ளன.
சமீபத்திய பேரழிவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் மாநில சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறும் போது, "வயநாடு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது" என்று கூறினார்.
அப்படி கூற காரணம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் பெங்களூருவிலிருந்து சாலை மார்க்கமாக வெறும் ஆறு மணிநேரத்தில் வயநாட்டிற்கு போய்விட முடியும். ஊட்டி வருவோர் அப்படியே வயநாடு போகவும் முடியும். பெங்களூர் நகரின் ஐடி ஊழியர்களுக்கு மிகவும் பிடித்த வார இறுதி சுற்றுலா தலமாக வயநாடு திகழ்கிறது.
அங்கு விதிகளை மீறி ரிசார்ட்ஸ், சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்கள் கட்டப்பட்டதாக புகார்கள் உள்ளது. அதை பெரிதாக கேரள மாநில அரசுகள் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் இருந்துள்ளன. மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவில் பெரிய அளவில் இருந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு எச்சரிக்கையை அதீத டூரிசத்தால் அரசும் மக்களும் கண்டு கொள்ளவில்லை.

இது ஒருபுறம் எனில், பல வாரங்களாக பெய்த கனமழையால் மலைகளின் உயரமான பகுதிகள் கடந்த வாரம் தளர்ந்து காணப்பட்டிருந்தது, திங்கள்கிழமை இரவு வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால், மண், நீர் மற்றும் கற்பாறைகள் ஆறுகள் கீழ்நோக்கி அதிவேகமாக பாய்ந்துசென்றன. இதனால் அங்கிருந்த குடியிருப்புகள் சீட்டு கட்டு போல் சரிந்து தண்ணீரில் மூழ்கின. பல குடியிருப்புகள் மண்ணில் புதைந்து போயின.
சென்னை எப்படி கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்காக பல்லாவரம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, பள்ளக்கரணை ஏரி, வேளச்சேரி ஏரி உள்பட பல்வேறு ஏரிகளை பறிகொடுத்ததோ.. அதுபோல், வயநாடு கட்டுப்பாடற்ற வளர்ச்சி காரணமாக அழகான மழையை உறிஞ்சும் காடுகளை பறிகொடுத்தது. அதனால் இயற்கையான நீரோடைகளை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், அதீத மழை நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான வயநாடு பிரக்ருதி சம்ரக்ஷனா சமிதியின் தலைவர் என் பாதுஷா கூறுகையில், "வயநாட்டில் இதுபோன்ற மழை பெய்வது புதியதல்ல. வயநாட்டில் சரியான வரன்முறை இல்லாத, முறையான கட்டுப்பாடுகள் இல்லாத சுற்றுலாச் செயல்பாடுகள் இத்தகைய பேரழிவுகளை மோசமாக்குவதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம். சுற்றுலாத்துறையானது சுற்றுச்சூழல் ரீதியாக, மிகவும் பலவீனமான பகுதிகளையும் முழுங்கிவிட்டது. அதுவே இன்றைய நிலைக்கு காரணம்
சுற்றுலாத்துறை அசுர வளர்ச்சி: வயநாடு கடந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அறிக்கையில், வயநாடு மாவட்டத்தின் மலைத்தொடரில் அதிக சுற்றுலா கட்டுமான வளர்ச்சி குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
முண்டக்கையில் உள்ள விஏஓ கே. பாபு இந்த வாரம் தனது அலுவலகத்தில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் போது கூறுகையில் "புவியியல் ரீதியாக முண்டக்கை பகுதி உண்மையில் மிகவும் பலவீனமாக உள்ளது என்று கூறினார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை அறிக்கையில், பல வருடங்களாக வயநாட்டில் மலைகள், காடுகள், நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை அழிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது. காடழிப்பு மற்றும் வணிகமாயான நிலங்களால் வயநாட்டின் சுற்றுச்சூழல் சீர்குலைத்துள்ளதாக அன்றைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் 14 பேர் இறந்து போயிருந்தனர்.
அண்மையில் நடந்த நிலச்சரிவில் தனது தந்தை உட்பட ஆறு குடும்ப உறுப்பினர்களை இழந்த 30 வயதான முண்டக்காய் பகுதியைச் சேர்ந்த ரஷித் படிக்கல் பரம்பன் கூறுகையில், 2019 க்குப் பிறகு வெளியாட்களின் கவனத்திற்கு முண்டக்கை தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகே முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியது. தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்த ஒரு அழகான பகுதி என்பதையும், ஆறுகள் பாய்ந்தோடும் அற்புதமான இடம் என்பதையும் கண்ட சுற்றுலா பயணிகள் பலர் இடங்கள் வாங்க ஆர்வம் காட்டினார்கள். அதன் காரணமாக
பல உள்ளூர்வாசிகள் தங்கள் நிலங்களை வெளியாட்களுக்கு விற்றனர். அவர்கள் அப்பகுதியில் சுற்றுலாத் தளங்களைக் கட்டினார்கள் என்றார்.
கேரளாவை பொறுத்தவரை 'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படுகிறது. கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் மேற்கில் அரபிக்கடலுக்கும் இடையில் உள்ள ஒரு சிறு நிலப்பகுதியாக உள்ள கேரளா, இந்தியாவின் மிக அழகிய மாநிலங்களில் ஒன்றாகும். இது "கடவுளின் சொந்த நாடு" என்று எல்லாராலும் புகழப்படுகிறது. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 2015 மற்றும் 2022 க்கு இடையில் இந்தியாவில் 3,782 நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60% கேரளாவில் தான் ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சூழலியல் உணர்திறன் குறித்து ஆய்வு செய்து, 2011-ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு வெளியிட்ட அறிக்கையில், "இங்கு பணக்காரர்களின் பேராசையால் மலைகள் பிளக்கப்படுவதுடன், ஏழைகளால் நசுக்கப்படுகிறார்கள். இந்த மலைத்தொடர் தென்னிந்தியாவின் சூழலியல் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பு" என்று கூறியுள்ளது.
சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையில், சுரங்கம், புதிய ரயில் பாதைகள் அல்லது பெரிய சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் ஆகியவற்றைத் தடுக்கவு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டிற்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது. சுற்றுலாவைப் பொறுத்தவரை, கடுமையான கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் நீர் பயன்பாட்டு விதிமுறைகளுடன் குறைந்தபட்ச பாதிப்பு சுற்றுலாவை மட்டுமே ஊக்குவிக்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பரிந்துரைகளை கேரளா உள்ளிட்ட பல்வேறு மலையை ஒட்டியுள்ள மாநில அரசுகள் ஏற்கவில்லை.. இதனால் புதிய குழு அமைக்கப்பட்டு, 2013ல் ஒட்டுமொத்த பாதுகாக்கப்பட்ட பகுதியான மலைத்தொடர்கள் 60% லிருந்து 37% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மலைத்தொடரை ஒட்டிய அனைத்து மாநிலங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதியை இன்னும் குறைக்கவே விரும்பின. "சுற்றுச்சூழல் ரீதியாக அதிக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் மறுசீரமைப்பு போன்ற மனித தலையீடுகள் இருக்கக்கூடாது" என்ற பரிந்துரைகள் செய்யப்பட்ட நிலையில், சுற்றுலாவிற்காக அரசுகள் அறிக்கையை புறக்கணித்துவிட்டன
இந்த புறக்கணிப்பு குறித்த குறித்த கேள்விகளை நிராகரித்த கேரள முதல்வர் விஜயன், தனது கவனம் நிவாரணம் மற்றும் மக்களின் மறுவாழ்வில் இருப்பதாகக் கூறினார், மேலும் இந்த சோகத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை எழுப்ப வேண்டாம்" என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைப் பற்றி கவலை தெரிவிக்கும் அதே வேளையில், முண்டக்கையின் உள்ளூர்வாசிகளுக்கு, முன்பு அதிக வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், சுற்றுலா தான் பெரிய அளவில் வேலையை கொண்டு வந்துள்ளது. முண்டக்கையில் தேயிலை தோட்டங்களுக்கு அடுத்தபடியாக, உல்லாச விடுதிகள் தற்போது இப்பகுதியில் இரண்டாவது பெரிய வேலை உருவாக்கும் துறை உள்ளது.
இதனிடையே வயநாடு சுற்றுலா அமைப்பின் தலைவர் கே.ஆர்.வாஞ்சீஸ்வரன் இதுபற்றி கூறும் போது, மனித செயற்பாடுகள் இயற்கைக்கு தாங்க முடியாததாக இருக்குமானால், இயற்கையானது அதன் சக்தியை வெளிப்படுத்தும். ஆனால் அதனை நாம் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த வகையில் இப்போது நாங்கள் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளோம். எனவே அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்." இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications