சொர்க்கம்யா.. தமிழ்நாட்டின் “வால்” - கேரளாவையே தோற்கடித்துவிடும் கன்னியாகுமரி ஆறுகளின் கொள்ளை அழகு
கன்னியாகுமரி: கேரளாவுக்கு சுற்றுலாவுக்காக படையெடுத்து செல்லும் தமிழ் மக்கள் ஒரு நொடி யோசித்து கன்னியாகுமரி பக்கம் கவனத்தை திருப்பினால் சுவர்க்கத்தை காணலாம். முக்கடல் சங்கமம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை கடந்து அங்கு வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.. வாருங்கள் பார்ப்போம்.
கேரளா, கர்நாடகா, கோவா என இயற்கையை தேடி சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் நம் மக்கள் தமிழ்நாட்டின் இயற்கை அழகை ரசிக்க தவறிவிடுகிறோம். அப்படி பலரால் கண்டுகொள்ளப்படாத பகுதிதான் கன்னியாகுமரி. மலையாள வாசம் அதிகமாக வீசும் இந்த தமிழ் மண்ணின் மலைகளும், கடலும், ஆறுகளும் பரபரப்பான உங்கள் மனதுக்கு ஆறுதல் தரக்கூடியவை. அந்த வகையில் குமரி மாவட்ட நதிகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்தாசன் எழுதிய விரிவான கட்டுரையின் ஒரு பகுதியை பார்ப்போம்.

“தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பேரதிசயங்களை கொண்டது கன்னியாகுமரிமாவட்டம்! கொட்டித் தீர்க்கும்! குதூகலித்து ஓடும்! கண்களை விரிய வைக்கும்! இதயங்களை அள்ளும்! மனதை வருடும், மயக்கம் கொள்ள வைக்கும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..! இங்கே ஒரு சிறிய அறிமுகம்; குமரி மாவட்டத்தில் ஓடும் தாமிரபாணி ஆற்றை நலம் விசாரிக்க எண்ணி நீங்கள் ஒரு மடல் எழுதினால், அதன் முகவரியில், கோதையாறும் பறளியாறும் தோன்றும் வனப்பகுதியும் இடம் பெற்றாக வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு திசையில் பாய்ந்தோடி அரபிக்கடலில் கலக்கும் குழித்துறையாற்றின் தாய் ஆறுகள் தாம் கோதையாறும் பறளியாறும். இவை இரண்டும் இணைந்து உருவாகும் ஆறுதான் குழித்துறையாறு. தாமிரபரணி ஆற்றின் தமிழ் பெயர் குழித்துரையாறு. நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் பெயர் பொருநை ஆறு. தாமிரபரணி என்பது வடமொழி சொல். குழித்துறையாற்றின் தாய் ஆறுகளான கோதையாறும் பறளியாறும் பாய்ந்தோடுகின்ற நிலத்தின் ஊடே அவை தோன்றும் மலைக்காட்டு பகுதிக்கு செல்வோம்.

கிழாமலை, மோதிரமலை, நாலுமுக்கு, வெள்ளச்சித்தோடு, வீரப்புலி வனப்பகுதிகளில் தோன்றுகிறது கோதையாறு. குற்றியாறு, கோதையாறு என்றதும் நமக்கு அரிக்கொம்பன் யானைதான் நினைவுக்கு வரும். கேரளா வனப்பகுதியில் இருந்து தேனி கம்பம் நகருக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை பிடித்து முத்துகுழி வயல் வனப் பகுதியில் விட்டனர். 1963-72 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மேல்கோதையாறு அணையும் கீழ் கோதையாறு அணையும் கட்டப்பட்டது. கோதையாறு ஆற்றுநீரும், குற்றியாறு அணை, சின்ன குற்றியாறு அணை நீரும் மேல் கோதையாறு அணையில் தேக்கப்படுகிறது. அதன் பின் கீழ்கோதையாறு அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கோதையாறு தேக்கப்படும் பேச்சிப்பாறை அணைக்கு போவதற்கு முன்பு கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் இன்னும் சில காட்டாறுகளை நாம் காண வேண்டும். கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் கல்லாறு அருவியாக விழுந்து கீழே பேச்சிப்பாறை அணைக்கு சென்று கோதையாறுடன் கலக்கிறது. சுற்றுலா செல்பவர்களுக்கு நன்கு அறிமுகமான இடம் கோதையாறு பகுதியில் உள்ள இரட்டை அருவி. அது கல்லாறு தான். மக்கள் குளிப்பதற்காக கல்லாறு அருவியை இரட்டை அருவியாக தமிழக அரசு சீரமைத்துள்ளது.

கோதையாறு மலைப்பகுதியில் தோன்றும் மயிலாறு, கோதையாறு இரும்பு பாலம் கீழாக ஓடி பேச்சிப்பாறை அணைக்கு வந்து சேர்க்கிறது. மேற்கே மோதிரமலையில் இருந்து வரும் மோதிரமலை அருவியோடு சேர்ந்து பேச்சிப்பாறை அணையில் மயிலாறு கோதையாற்றுடன் கலக்கிறது. கிழாமலை பகுதியில் இருந்து தோன்றி பேச்சிப்பாறை அணைக்கு ஒரு காட்டாற்று வெள்ளமாக வருகிறது கிழவியாறு.” என்று குறிப்பிட்டு உள்ளார்.













Click it and Unblock the Notifications