காஷ்மீர் என்னங்க காஷ்மீரு..கொடைக்கானல் வந்து பாருங்க! அப்படியே உறைஞ்சு போயிருவீங்க..அசத்தல் கிளைமேட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி , ஜிம்கானா ஆகிய பகுதிகளில் தாமதமாக தொடங்கிய உறைப்பனி சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தையே மிஞ்சும் வகையில் தற்போது இருக்கிறது கொடைக்கானல்..
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.
கொடைக்கானல்:
குறிப்பாக யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்டவை நூற்றுக்கணக்கில் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பணியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே நீர்ப்பனி , உறை பனி, கெண்ட பனி என வெவ்வேறு கால நிலைகளை பொறுத்து பனியின் தாக்கம் அதிகரிக்கும்.
உறைபனி சீசன்:
ஆனால் இந்தாண்டு டிசம்பர் மாததொடக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக கொடைக்கானலில் உறைப்பனி சீசன் சற்று தாமதமாக தொடங்கி உள்ளது. குறிப்பாக இன்று காலை நட்சத்திர ஏரியில் நீர் ஆவியாகி மேலே பறந்து செல்லும் ரம்யமான காட்சி காண்போரை கவர்ந்து இழுத்தது. அதேபோல கீழ் பூமி, ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனியானது தற்போது தொடங்கியுள்ளது.
கடும் குளிர்:
மேலும் இங்குள்ள பசுமையான புல்வெளிகளில் ஆங்காங்கே வெள்ளை கம்பளம் விரித்தது போல கொட்டி கிடக்கும் உறை பனி கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதனை இந்த பகுதியில் நடை பேச்சி மேற்கொண்ட சுற்றுலாப் பணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ரசித்தபடி சென்றனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது வரை சீசன் தொடங்கி இருப்பதால் கடுமையான குளிர் நிலை வருவதும் இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் கய்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சரிந்த வெப்பநிலை:
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது உறைபனி காலம் தொடங்கியுள்ளது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இரவில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி, மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவியது. இன்று அதிகாலை 10 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக வெப்ப நிலை காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள்:
இதனால் பசுமைப் புற்களின் மேல் விழுந்த நீர்ப்பனித் துளிகள் உறைபனியாக மாறின. நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா, ஜிம் கானா புல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உறைபனி காணப்பட்டது. இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பொதுவாக டிசம்பர் ஆரம்பத்திலேயே கொடைக்கானலில் உறை பனிக் காலம் தொடங்கும்.
தொடர் விடுமுறை:
ஆனால், தற்போது தாமதமாகவே உறை பனி தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் தான் இப்படி இருக்கும். ஆனால் தற்போது கொடைக்கானலிலேயே அப்படித் தான் உள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை, பொங்கல் என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வரும் நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications