கடவுளின் தேசத்தின் கனவு பாதையில் ஹவுஸ்புல் போர்டு.. மூணாறு போக முட்டி மோதும் மக்கள்.. ஏன் தெரியுமா?
தேனி: அரையாண்டு தேர்வுகள் நாளையுடன் பாதிபேருக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாயுடன் மீதி பேருக்கும் முடிகிறது. அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வரப்போகிறது. புத்தாண்டிற்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு முறை, புத்தாண்டு ஆகியவற்றை கொண்டாட பலரும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். கடவுளின் தேசமான மூணாறுக்கு செல்ல மக்கள் முட்டி மோதுகிறார்கள் என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறை பொறுத்தவரை கோடைக்காலத்தை விடவும் குளிர்காலத்தில் செல்வது உங்கள் உடலை மெய்சிலிர்க்க வைக்கும். குறிப்பாக டிசம்பர் மாத இறுதியிலும் ஜனவரியிலும் நிலவும் உறைபனி காலம், மூணாறை விரும்பும் பலருக்கும் பிடிக்கும். மூணாறை நேசிப்பவர்களிடம் கேட்டால் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், புத்தாண்டு விடுமுறையிலும் எப்படியாவது மூணாறுக்கு போக வேண்டும் என்பார்கள்.. மழையின் அச்சுறுத்தல் சுத்தமாக இருக்காது. நன்கு பனி விழுகும்.

தேயிலைத் தோட்டங்கள் நீர் சுமந்த பந்துகள் போல் காட்சி அளிக்கும். சூரியனே எட்டிபார்க்க மனமே இல்லாமல் வெட்கப்பட்டு ஓடிவிடும்.. மேகக்கூட்டங்கள் அடிக்கடி நகர்ந்து வந்து உங்களை படம் பிடிக்கும்.. அந்நியர்கள் வந்துவிட்டதாக கருதி அவசரமாக ஓடக்கூடச் செய்யும்.. பசுமை போர்த்திய புல்வெளிகளாக காடுகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தளிக்கும். தேனியில் கிளம்பினால், போடியை தாண்டி முந்தலில் ஏறும் போது, முகம் எல்லாம் உங்களுக்கு மாறிவிடும்...
அபாய வளைவுகளே உங்களை ஆச்சரியப்படுத்தும்.. போடி மெட்டு டீயும் வடையும் உங்கள் உடல் வெப்பத்தோடு வம்பிழுக்கும். அங்கிருந்து எட்டிப்பார்த்தால் ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சமவெளியும் மறுபக்கம் கேரளாவில் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைக்காடுகளும் உங்களை பிரம்மிக்க வைக்கும்.. அதன்பிறகு தொடங்கும் கடவுளின் தேசத்து கனவுப்பாதை உங்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும். மலையில் இப்படியும் ஒரு மாயாஜாலம் நிகழுமா என்பது போல் சாலைகளை செதுக்கி இருப்பார்கள். வழி நெடுகிலும் தேயிலை தோட்டங்களும் மேகங்களும், உறை பனியும் உங்களை உறைய வைத்துவிடும்..

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களால் மூணாறு தேவாலயங்கள் களைகட்டி காணப்படும். கண்களுக்கு விருந்தளிக்கும் பல விஷயங்களை பார்க்க முடியும். மூணாறு மக்கள் மொத்தமும் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். மூணாறில் உள்ள ஏராளமான மக்கள் கொண்டாடிமகிழும் 10நாள் பண்டிகையாக வரும் நாட்கள் இருக்கும். பண்டிகையை கொண்டாடும் மக்களுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடுவது பலருக்கும் பிடிக்கும் என்பது தான் மூணாறுக்கு டிசம்பர் இறுதியில் மக்கள் கூட்டம் அலைமோதக் காரணம் ஆகும்.
மூணாறை பொறுத்தவரை மூணாறு நகர், நல்லதண்ணி எஸ்டேட், குண்டலை எஸ்டேட் ஆகிய இடங்களில் மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது. இன்னும் சில நாட்களில் மைனஸ் டிகிரி அளவில் மூணாறில் குளிர் காணப்படும். இதுவும் மக்கள் அதிகம் வருவதற்கு காரணமாக உள்ளது. பகலில் இதமான வெயில் இரவில் கடும் குளிர் என்று கிளைமேட் வேறுமாதிரி இருக்கும். இந்த குளிர் சீசனை அனுபவிக்க ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு, வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இதற்காக வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை மூணாறில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications