மேகத்தை எடுத்து தாவணியாக உடுத்திய நீலகிரி மலைகள்.. ஊட்டிக்கு இப்ப மட்டும் வந்தீங்க.. அவ்வளவுதான்!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி பொழிவு தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. பச்சை பசும் புல்வெளிகள் எல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்திய பனிப்பாறைகள் போல் பனித்துளிகளால் காணப்படுகின்றன. வாகனங்கள் எல்லாம் பனியால் மூடப்படுகின்றன. உறைபனி காரணமாக மினி காஷ்மீர் போல் ஊட்டி மாறிக்கிடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக அவ்வப்போது புயலுடன் கூடிய மழை காணப்பட்டு வந்ததால் உறைபனி பொழிவு டிசம்பர் மாத இறுதியில் தான் துவங்கியுள்ளது. உறைபனியும், பனிபொழிவும் இப்போது தான் ஆரம்பித்துள்ளது.

உதகையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணபட்ட நிலையில், நேற்று இரவு குளிரின் தாக்கம் தீவிரமடைந்து காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் ஊட்டியின் பல்வேறு இடங்களில் உறைபனி பொழிவு காணப்பட்டது. குறிப்பாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், அரசு தாவரவியல் பூங்கா, தலை குந்தா ஆகிய பகுதிகளில் உறைபனி பொழிவு இருந்தது.

ஊட்டியில் உள்ள நீர்நிலைகள், தாழ்வான பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள பச்சை பசும் புல்வெளிகள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டு, மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. அதேபோல் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது பனிப்படர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

இதனிடையே ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3 டிகிரி செல்சியல் ஆக பதிவாகியுள்ளது. மேலும் அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

இன்னும் வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை பெய்த உறைபனி மற்றும் பனிபொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிரிலிருந்து பாதுகாக்க அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ஆங்காங்கே தீ மூட்டி காய்ந்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் கம்பிளி ஆடைகளை அணிந்தவாறு தங்களை குளிரிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். உறைபனி வேண்டும் என்போரையும், குளிரை விரும்புவோரும் ஊட்டிக்கு தாராளமாக ஒரு ட்ரிப் போடலாம். தேனிலவு தம்பதிகள், குறைந்த கட்டணத்தில் ஓட்டல்களில் தங்கி ஊட்டியை சுற்றி பார்க்க இப்போது நல்ல வாய்ப்பு ஆகும்.

மற்ற காலங்களைவிட இப்போது கட்டணம் குறைவாகவே இருக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு இந்த வார இறுதியில் செல்ல போகிறீர்களா.. அதிகபட்சம் 40000 ரூபாயும், குறைந்த பட்சம் 500 ரூபாயில் இருந்த ரூம்கள் வாடகைக்கு கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விரும்புவோருக்கு ஊட்டி பெஸ்ட் சுற்றுலா தலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications