கொடைக்கானல் டூ மூணாறு.. போக முடியாத பாதையில் புதைந்திருக்கும் பொக்கிஷம்.. காலாண்டு லீவு டூர் பிளான்
கொடைக்கானல்: கொடைக்கானலும், மூணாறும் தனித்தனி பகுதியாக இருந்தாலும், இரண்டு ஊர்களுக்கும் மலைக்குள்ளேயே பயணிக்கக்கூடிய வகையில் எஸ்கேப் ரூட் இருக்கிறது. இந்த பாதையை கேரள அரசு தடை செய்து பல வருடம் ஆகிவிட்டது. ஆனால் இரு சாலைகளிலும் ஏராளமான அற்புதமான இடங்கள் உள்ளன. மூணாறை தாண்டியும், கொடைக்கானலை தாண்டியும் சென்றவர்களுக்கே இந்த இடம் தெரியும். அதை பற்றி பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போரின் போது, வெள்ளைக்காரர்கள் , அரபிக்கடல் வழியாக தப்பிச்செல்ல போடப்பட்ட பாதை தான் மூணாறு டு கொடைக்கானல் சாலை.. இது எஸ்கேப் ரூட் என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலை பேரிஜம் ஏரி வழியாக போடியின் டாப் ஸ்டேசனை அடைந்து நேரடியாக மூணாறு போகும். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை.. இந்த சாலையில் தான் பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான்சோலை போன்றவை உள்ளன. அதேநேரம் கேரளாவின் மூணாறுக்கு செல்ல கொடைக்கானலில் இருந்து இன்னொரு பாதை இன்று வரை உள்ளது.

ஆனால் இந்த பாதையில் கிளாவரை முதல் கோவிலூர் செல்லும் வழியில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சுத்தமாக பாதை இல்லை.. இங்கு கிராமங்களும் இல்லை. முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். அந்த பாதையை சரி செய்தால், கேரளாவின் மூணாறு வருபவர்கள் கொடைக்கானலுக்கும், கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்பவர்கள் எளிதாக போக முடியும். ஆனால் அந்த பாதையை இரு மாநில அரசுளுமே மூடியிருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டின் கிளாவரையில் இருந்து கேரளாவின் கோவிலூர் அருகே 12 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. இந்த பாதை அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த சாலையில் உள்ளூர் கிராம மக்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
அதேநேரம் மூணாறு முதல் கொடைக்கானல் வரை உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் வரை அருமையான சுற்றுலா தலங்கள். அவற்றின் விவரங்களை பார்ப்போம். மாட்டுப்பட்டி அணை, குண்டலா அணை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேசன் போன்ற பல இடங்கள் உள்ளன. கொடைக்கானல் எல்லையை ஒட்டி, அமைந்துள்ள கோவிலூர் கிராமத்தில் பல ஸ்ட்ராபெரி பண்ணைகளும் உள்ளன . வட்டவாடா, பழத்தோட்டம், கொட்டகம்பூர் போன்ற மலை கிராமங்களும் உள்ளன. இந்த பகுதிகள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளன, ஆண்டு முழுவதும் அருமையான காலநிலை இங்கு இருக்கும்.

அதேபோல் கொடைக்கானல் டூ மூணாறு சாலையில், பூம்பாறை, மன்னவனூரை தாண்டி, பூண்டி கிளாவரை போன்ற கிராமங்கள். கிளாவரையை பொறுத்தவரை எங்கும் பசுமை ஆடை உடுத்திய கிராமம் ஆகும். அதுமட்டுமின்றி கொடைக்கானலின் கடைசி கிராமம் ஆகும். இந்த பாதையில் பயணிப்பதே மிக அருமையான அனுபவம் ஆக இருக்கும். மழையும், பனியும் மெய்சிலிர்க்க வைக்கும்.. மற்றபடி வழக்கமான டிரக்கிங் பாய்ண்டுகள், தங்கும் விடுதிகள் மூணாறு பாதையிலும், மிக இயற்கையான இன்னமும் மனிதர்கள் அதிகம் போகாத பல அற்புதமான இடங்கள், அருவிகள், காடுகள் கொடைக்கானல் பாதையிலும் இருக்கும்.

இயற்கை இன்னமும் இயற்கையாக இருக்கும் பகுதிகளை அதாவது அதிகம் சுற்றுலா நோக்கங்களுக்காக மாற்றப்படாத இடங்களை தமிழகத்தின் கிளாவரை பக்கம் சாதாரணமாக பார்க்க முடியும். அதேநேரம் கோவிலூர் வட்டவடா உள்ளிட்ட கேரள பக்கம் எல்லாமே சுற்றுலா மயமாகிவிட்டது. தமிழக எல்லையை நோக்கி கேரள வனத்துறை ஜீப் சவாரி எல்லாம் வைத்திருக்கிறது. சுற்றி பார்த்துவிட்டு அனுபவத்தை பகிருங்கள்.












Click it and Unblock the Notifications