சட்டென நடந்தே சென்று.. இருட்டு கடை அல்வாவை ருசித்த ஸ்டாலின்.. ருசி சூப்பர் என ரசித்து பாராட்டு!
நெல்லை: முதல்வர் ஸ்டாலின் இப்போது கள ஆய்வுக்காக நெல்லை சென்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்டாலின், தொடர்ந்து இருட்டு கடைக்குச் சென்றார். அங்கு அல்வாவை ரசித்துச் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், சுவை நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். மேலும், இருட்டு கடைக்கான பெயர் காரணத்தையும் கேட்டறிந்தார். இது தொடர்பான வீீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் சென்று ஆய்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் நெல்லை மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்:
நேற்று வியாழக்கிழமை அரசு மற்றும் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அரசு மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நெல்லை டவுன் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள பிரபல அல்வா கடையான இருட்டு கடைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். சற்று தூரத்திற்கு முன்பாகவே வேன் நின்றுவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் நடந்தே அந்த அல்வா கடைக்கு சென்றார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இருட்டு கடையில் முதல்வர் ஸ்டாலினை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். உரிமையாளர்கள் முதல்வருக்கு அல்வாவை தந்த நிலையில், அதை வாங்கி முதல்வர் சுவைத்தார். ருசி அருமையாக இருப்பதாகவும் பாராட்டினார். தொடர்ந்து அல்வா கடைக்கு இருட்டு கடை என்று எப்படிப் பெயர் வந்தது எனக் கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.
இருட்டு கடை அல்வா:
பல ஆண்டுகளுக்கு முன்பு கடை திறக்கப்பட்ட போது, லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் தான் அல்வா விற்பனை நடைபெறுமாம். இதன் காரணமாகவே மக்கள் இந்த கடையை 'இருட்டாக இருக்கும் கடை' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். அதுவே நாளடைவில் 'இருட்டுக் கடை' என்று பெயரை பெற்றுள்ளது. இதை கடையின் உரிமையாளர் முதல்வர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து சில கேள்விகளைக் கேட்டார். அதற்குக் கடை உரிமையாளர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து பணம் கொடுத்து அல்வா வாங்கிவிட்டுச் சென்றனர்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாக இருட்டுக் கடைக்கு வந்து அல்வாவை ருசித்து சாப்பிட்டதன் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், முதல்வர் ஸ்டாலின் இருட்டுக் கடைக்கு வந்து அல்வா சுவைப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை வந்திருந்த போதும் அவர் இதே கடையில் அல்வா சாப்பிட்டு இருந்தார். இப்போதும் மீண்டும் வந்து சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான போட்டோக்களையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி:
முன்னதாக மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இப்போதெல்லாம் சிலர் கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சியை பிடித்து முதல்வராகிவிடலாம் என நினைப்பதாக விமர்சித்தார். மேலும், 2026ம் ஆண்டிலும் நிச்சயம் திமுகவே ஆட்சியை அமைக்க உள்ளதாகவும் மக்கள் ஏற்கனவே அந்த முடிவை எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "2026ம் ஆண்டில் திமுக தான் வென்று, ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். இனி தொண்டர்கள் வேலை தான். உடனடியாக களத்தில் இறங்கி கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications