கிறிஸ்தவர்கள் இருக்கும் பஸ் உங்களுக்காக ஊருக்குள் வராது! பூசாரியை அவதூறாக பேசிய நடத்துநர்! நடவடிக்கை
நெல்லை: தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில் உள்ள கண்டக்டர் ஒருவர் மத ரீதியாக பேசியதாக கூறி பஸ்சை வழிமறித்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வள்ளியூர் உள்ளே பஸ் இயக்கப்படாது என்று கண்டக்டர் கூறியதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அந்த அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நெல்லை வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டம் விவேகானந்தபுரம் பணிமனையை சேர்ந்த டிஎன்.74, 2120 என்ற எண் கொண்ட அரசு பஸ் நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை புறப்பட்டது.

கோவில் பூசாரி பயணம்
குரும்பூர் அருகே பஸ் வந்த போது நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணிகள் அதிகளவில் ஏறினர். தொடர்ந்து பஸ்சானது அதிகாலை, 4.50 மணியளவில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. சிறிது நேரம் நிப்பாட்டிவிட்டு மீண்டும் பஸ் 5 மணிக்கு புறப்பட்டது. அப்போது அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூசாரியான சுப்பிரமணியன் என்பவர் தன் மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஏறினார்.
வள்ளியூருக்கு அவர் டிக்கெட் எடுத்துள்ளார். மேல் சட்டை அணியாமல் ருத்ராட்சை மாலையுடன் அவர் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பஸ் வள்ளியூர் பைபாஸ் அருகே நின்றது. அப்போது கண்டக்டர் அந்தோணி என்பவர் சுப்பிரமணியனை இறங்குமாறு சொல்லியிருக்கிறார். அப்போது அவர் ஏன் பஸ் உள்ளே செல்லாதா? எல்லா பஸ்களும் வள்ளியூர் உள்ளே சென்று தானே வரும்.. என்று கேட்டதாக கூறப்படுகிறது.
வள்ளியூர் உள்ளே போகாதா?
இதற்கு பஸ் கண்டக்டர், 'பஸ் வள்ளியூருக்குள் செல்லாது.. பைபாஸில் மட்டும் தான் நிற்கும்' என சொல்ல, அதற்கு பயணி இது ஒன் டூ ஒன் பஸ் கிடையாது. எனவே வள்ளியூர் செல்ல வேண்டும் என்று இறங்க மறுத்து இருக்கிறார். இதற்கு கண்டக்டர், பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் அதிகமாக இருக்கிறாங்க.. உன் ஒருவருக்காக பஸ் வள்ளியூர் உள்ளே செல்லாது.. என கூறியதாக சொல்லப்படுகிறது.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
எனினும் சுப்பிரமணியன் பஸ்சில் இருந்து இறங்க மறுத்துள்ளார். இதனால் பஸ் வள்ளியூருக்குள் சென்றுள்ளது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய சுப்பிரமணியன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தார். உடனே அங்கிருந்த ஊர் மக்களும் அவருடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பஸ்சை எடுக்க விடாமல் போராட்டம் செய்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுப்பிரமணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு அந்த பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது. அப்போது சுப்பிரமணியம் கூறுகையில், பஸ்சில் இருந்த பயணிகள் எல்லாரும் கண்டக்டருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார். மேலும் பஸ்சில் எல்லாரும் டிக்கெட் எடுத்து தான் வந்திருக்கிறோம்.
பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
நெல்லை - நாகர்கோவில் ஒன் டூ ஒன் பஸ்களை தவிர மற்ற அனைத்து பஸ்களும் வள்ளியூர் வந்து தான் செல்லும். ஆனால் எல்லா பஸ்களும் இப்படி வருவதில்லை என்று கூறினார். அப்பகுதி மக்களும் இப்படி நிறைய பஸ்கள் வள்ளியூர் வராமலேயே சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் பயணியை மதிக்காமல், மத ரீதியாக நடந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பயணியிடம் அவதூறாக பேசியதாக நாகர்கோவில் அரசு பஸ் கண்டக்டர் அந்தோணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications