Rocket Raja: ஏகே-47, ராக்கெட் லாஞ்சர் வைத்திருந்த வழக்கு: தென்காசி கோர்ட்டில் ஆஜரான ராக்கெட் ராஜா! போலீஸ் குவிப்பு
தென்காசி: ஏகே - 47 துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்கள் வீட்டில் இருந்ததாக பணங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று அவர் நேரில் ஆஜரானார். இதையொட்டி தென்காசி நீதிமன்ற வளாகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 40-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பனங்காட்டு படை கட்சி தலைவராக இருப்பவர் ராக்கெட் ராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை, கொலை முயற்சி, ஆயுதம் பதுக்கல் உள்பட பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் உள்ளன.

ஏகே 47 துப்பாக்கி வீட்டில் இருந்ததாக
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கோழி அருள் நான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து ராக்கெட் ராஜாவிடம் விசாரணை நடத்த கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது ராக்கெட் ராஜா வீட்டில் ராக்கெட் லாஞ்சரும், ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் கிடந்ததாக போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
நேரில் ஆஜர் ஆன ராக்கெட் ராஜா
இதனால் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக ராக்கெட் ராஜா மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கானது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ராக்கெட் ராஜா நேரில் ஆஜர் ஆனார்.
40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதையொட்டி, தென்காசி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 40-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று நீதிமன்றத்திற்குள் வரும் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.












Click it and Unblock the Notifications