தென்காசியில் தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி.. டார்ச் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதி! என்ன நடந்தது
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளா செல்லும் சாலையில் எஸ் வளைவு அருகே உள்ள தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் தண்டவாளத்தில் ரயில் வந்துகொண்டிருந்த நிலையில், லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதி வயதான தம்பதி டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து பிளைவுட் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை மணிகண்டன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் கிளீனராக பெருமாள் (28) என்பவரும் இருந்தார்.

நேற்று அதிகாலை 1 மணியளவில் தமிழக - கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரை 'எஸ்' வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுபாட்டை இழந்த லாரி 50 அடி ஆழத்தில் விழுந்தது. இதில் அந்த வழியாக செல்லும் கேரளா - தென்காசி ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுர் பலியனார். கிளீனர் லேசான காயங்களுடன் தப்பினார்.
தண்டவாளத்தில் விழுந்த லாரி: தண்டவாளத்தில் லாரி விழுந்த சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்ட தொழிலாளர்களான வயதான தம்பதி சண்முகையா (66) வடக்கத்தி அம்மாள் (60) ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
பெரும் விபத்து தவிர்ப்பு: இதனை பார்த்த வயதான தம்பதி, தண்டவாளத்தில் விழுந்து கிடக்கின்ற லாரி மீது ரயில் மோதினால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, எப்படியாவது ரயிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு சமயோஜிதமாக செயல்பட்டு டார்ச்லைட் அடித்தபடி ரயிலை நோக்கி ஓடினர். இதனைப் பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் உடனே ரயிலை நிறுத்தினார்.
இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்துக்குள்ளான தகவல் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, உடனே ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வயதான தம்பதிக்கு பயணிகள் பாராட்டு: தண்டவாளத்தில் கிடந்த லாரி, ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு தண்டவாளம் சீர் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் தாமதமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. சென்னை எழும்பூர் - கொல்லம் ரயிலும் தென்காசி ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விபத்துக்குள்ளான லாரி தண்டவாளத்தில் கிடந்ததால், அவ்வழியாக ரயில் வரும் போது பெரும் விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்திய வயதான தம்பதிக்கு பயணிகள் பலரும் பாராட்டுகக்ளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications