குற்றாலத்துக்கு டூர் போறீங்களா.. சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகம் தெரியாத இந்த மூணு ஸ்பாட்!
சென்னை: தென்காசி மாவட்டம் குற்றால அருவி சுற்றுலா பயணிகளுக்கு கனவு இடம் என்று சொல்லலாம். ஆனால் குற்றாலத்திற்கு பக்கத்திலேயே 15 முதல் 20 கிமீ தொலைவில் இருக்கக் கூடிய 3 இயற்கை ரம்மியம் மிக்க இடங்களை தான் பார்க்க இருக்கிறோம். சுற்றுலா பிரியர்களுக்கு சொர்க்கமான பகுதியாக உள்ள, குண்டாறு அணை, அடவிநயினார் அணை, கும்பாவுருட்டி அருவி போன்ற இடங்களுக்கு எப்படி செல்வது, அங்கு என்னென்ன ஸ்பெஷல் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி சுற்றுலா பயணிகளின் கனவு இடம் என்றால் மிகையல்ல. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து இருக்கும் குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அருவிகள் உள்ளன. விடுமுறை தினத்தில் செலவு அதிகம் இல்லாமல் ஜாலியான குளியல் போட்டுவிட்டு வர நினைக்கும் சுற்றுலாப் பயணிகள் பலரும் குற்றாலம் செல்லவே விரும்புவார்கள்.

அதிலும் தென் பகுதிகளை சேர்ந்தவர்கள், சீசன் தொடங்கிவிட்டால் தவறாமல் அட்டண்டன்ஸ் போட்டு விடுவார்கள்.. குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பலருக்கும் இங்குள்ள ஐந்து பிரதான அருவிகளை மட்டுமே நன்கு தெரிந்து வைத்து இருப்பார்கள். ஆனால் குற்றாலத்திற்கு அருகிலேயே பயணிகள் ஆசை தீர குளித்து மகிழும் அளவிற்கு பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
குண்டாறு அணை: குற்றாலத்தில் இருந்து வெறும் 13 கிலோ மீட்டர் தொலைவில் குண்டாறு அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தபடியே இந்த குண்டாறு அணைக்கு செல்லலாம். 1983 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. பல சினிமா திரைப் படங்கள் இந்த பகுதியில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. குண்டாறு அணையை ஒட்டி பல அழகிய அருவிகள் உள்ளன.

படகு சவாரி: இந்த அருவிகள் இருக்கும் இடம் கரடு முரடானது என்பதால் சொந்த வாகனங்களில் செல்ல முடியாது. மலை அடிவாரம் வரை தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. அங்கு நிற்கும் ஜீப்கள் மூலமாக மலைப்பகுதிக்கு செல்லலாம். இங்குள்ள அருவிகளில் நீண்ட நேரம் குளிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்காது என்பதால்.. நீண்ட நேரம் குளித்துவிட்டு ஜில் செய்ய சிறந்த இடமாக இந்த அருவிகள் உள்ளன. இது போக குண்டாறு அணையில் படகு சவாரி வசதியும் உண்டு. மழைக்காலங்களில் குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாயும். இந்தக் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமையும். குற்றாலத்தில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை உள்ளது.
அடவி நயினார் அணை: குற்றாலத்தில் இருந்து 40 நிமிடத்தில் செல்லக் கூடிய தூரத்தில் உள்ளது அடவி நயினார் அணை. கேரள எல்லை அருகே உள்ள இந்த அணைக்கு செல்லும் வழியில் இருபுறமும் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும். மேக்கரைக்கு அருகில் அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

தர்மதுரை, அந்நியன் போன்ற படங்களும் இங்கே ஷூட் செய்யப்பட்டுள்ளது. குற்றால சீசன் நேரத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அணைக்கு மேலே ஒரு அருவி உள்ளது. ஆனால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. குற்றாலத்தில் இருந்து அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேக்கரை என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் இந்த அணை உள்ளது.
கும்பாவுருட்டி அருவி: தமிழக எல்லையில் கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த அருவி உள்ளது. குற்றாலம் - அச்சன் கோவில் சாலை வழியாக இந்த கும்பாவுருட்டி அணையை அடையலாம். கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.50 செலுத்த வேண்டும். சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் விவரம் சேகரிக்கப்படும். இந்த அருவிக்கு செல்லும் பகுதியில் சிறிய நீரோடை, கொண்டை ஊசி வளைவுகள் என சாகச பயணமாக இருக்கும். குற்றாலத்தில் இருந்து வெறும் 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அருவி உள்ளது.













Click it and Unblock the Notifications