ஊட்டி டூர் போக திட்டமா.. உங்கள் வண்டியில் தப்பி தவறிக்கூட இதை கொண்டு வந்துடாதீங்க
ஊட்டி: ஊட்டிக்கு சுற்றுலா வருகிறீர்கள் என்றால், அதுவும் சொந்த வாகனங்களில் அல்லது வாடகை கார் அல்லது பேருந்துகள் மூலம் வருகிறீர்கள் என்றால், மறந்தும் சிலிண்டர் ஏற்றி வர வேண்டாம்.. ஏனெனில் ஊட்டிக்கு வரும் வாகனங்களில் சிலிண்டர் ஏற்றி வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரையில் எல்லா பக்கமும் வெயில் கடுமையாக இருக்கிறது.. தாங்க முடிலையா குருநாதா.. ஏன் இப்படி வெறிபிடிச்சு அலையுற என்று சூரியனை திட்டாதவர்களே இல்லை.. ஈரோடு, சேலம் பக்கம் கிழக்கு பக்கம் வீடு பார்த்து, வாஸ்து எல்லாம் பார்த்து குடியேறிடுச்சு போல.. அவ்வளவு உக்கிரமாக இருக்கிறது காவிரி பூமி.. பக்கத்தில் இருக்கும் கோவை எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறோமா அல்லது வேலூர் சித்தூர் பார்டரில் இருக்கிறோமா என்று கதறுகிறார்கள். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. தேனி, மதுரை பக்கம் வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரில் குதித்து உயிர் தப்பி வருகிறார்கள்.. ஏனெனில் அந்த அளவிற்கு அங்குமே வெயில் கடுமையாக உள்ளது. மரங்கள் மட்டும் அதிகம் இல்லை என்றால் தென்காசியில் தப்பிப்பிழைப்தே கடினம் தான்.. திருநெல்வேலியில் சாலைகள், மலைக்காலங்களில் அல்வாவில் முழ்கியது போன்று குளுகுளுவென குண்டும் குழியுமாக சகதியுடன் காணப்படும்.. இப்போது வெயில் தாருடன் காலும் வெந்துவிடும் போல,. அந்த அளவிற்கு உக்கிரமாக இருக்கிறது..

இப்படி தமிழ்நாடு முழுக்க வெயில் கடுமையாக இருப்பதால், மக்கள் வெயில் குறைவாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானலுக்கு சாரை சாரையாக படை எடுக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே வெயில் குறைவாக உள்ள ஊட்டி, சுற்றுலா பயணிகள் வருகையால் சூடாகி காணப்படுகிறது. மழை எப்படியாவது வந்துவிடாதா, கென்யா பக்கம் போன மேகங்கள் எல்லாம், இங்கு எப்போது திரும்ப வரும் என்று வானத்தையே பார்க்கிறார்கள் சுற்றுலா பயணிகள்.. மாலை நேரம் தொடங்கி விடியும் வரை ஊட்டியில் வாழ்வது வரமாக இருக்கிறது, இதற்காக வண்டி கட்டி வருகிறார்கள் வடமாநில மக்கள்..
சரி விஷயத்திற்கு வருவோம் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக சொந்த வாகனங்களில் நீலகிரிக்கு படையெடுத்து வரும்நிலையில்,இங்கு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம் ஆகியவை அதிகளவில் வசூலிக்கப்படுகிறது. இதனால் செலவுகளை கட்டுப்படுத்த நினைக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களில் கேஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் கையோடு கொண்டு வருகிறார்கள். விரும்பிய இடங்களில் சமையல் செய்து சாப்பிட்டு செலவை மிச்சப்படுத்தி செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் நீலகிரி மலையின் நிலையோ வேறாக உள்ளது. கிட்டத்தட்ட 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. அதனால் சாலையோரம் அல்லது வனப்பகுதியோரம் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்தால், வறண்டு போன பகுதியில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். தீக்குச்சியை தெரியாமல் கீழே போட்டாலே பெரிய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு வறண்டு காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வர நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனாலும் அதையும் மீறி சில சுற்றுலா பயணிகள் சிலிண்டர்களை எடுத்து வருகிறார்கள். இதை கண்ட அதிகாரிகள் சிலிண்டருக்கு அபராதம் விதிக்க தொடங்கி உள்ளனர்.
நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். நேற்று வேலூர் மற்றும் கர்நாடக மாநில மைசூர் பகுதியில் இருந்து பஸ் மற்றும் வேனில் வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் நுகர்பொருள் வினியோகத் துறையிடம் வழங்கப்பட்டது. மேலும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் கேஸ் சிலிண்டர்கள் எடுத்து வந்தால் வாகன பறிமுதல் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications