தெய்வமே இங்கேயும் வந்துட்டீங்களா.. அடியோடு மாறிய கொடைக்கானல்.. சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது
கொடைக்கானல்: தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்று சொல்வது போல் கொடைக்கானல் வானிலை சூப்பராக மாறியுள்ளது. கொடைக்கானலில் குளு, குளு சீசன் மழையுடன் தொடங்கிவிட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி இரண்டு மாசத்துக்கு கொடைக்கானலை (சின்ராசை) கையிலேயே பிடிக்க முடியாது..
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாதளம் ஆகும்.. சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய சுற்றுலாதளங்களில் கொடைக்கானலுக்கு தனி இடம் உண்டு. இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்வார்கள்.. இவர்களை தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகம் வருவார்கள்.. வட இந்திய மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் அதிகம் வந்து செல்லும் சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது.

கொடைக்கானலில் உள்ள குளுகுளு சீதோஷண நிலை, ஆளையே மயக்கும் மலை தொடர்கள் மற்றும் காடுகள், மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்டமான செயற்கை ஏரிகள், அருவிகள் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் நனைந்தபடி, படகில் பயணம் செய்தால், இந்த பிறவிப்பயனையே அடைந்து விடுவீர்கள்.. கொடைக்கானலில் ஒரு நாள் இரவு தங்கி குளுகுளு கால நிலையை அனுபவிக்க பல பேர் தவம் கிடக்கிறார்கள். இயற்கை அப்படியே இயற்கையாக இருக்கும் ஒரு சுற்றுலா தலம் என்றால் அது கொடைக்கானல் தான்..
கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் அதாவது சித்திரை பிறக்க போகிறது என்றால் கோடைமழை பெய்யும், சித்திரையும், குளு, குளு சீசனும் கொடைக்கானலில் ஒன்றாகவே தொடங்கும். தமிழ்நாட்டின் பிற ஊர்களில் எல்லாம் வெயில் கடுமையாக இருக்கிறது. தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் பல பேர் படை எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
கடும் வெயில் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது. தொடர்ந்து வெப்பம் நிலவியதால் இந்த ஆண்டு சீசன் தள்ளிப்போகுமா என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. எதிர்பார்த்தபடியே நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன்பிறகு விட்டுவிட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது.
இதையடுத்து கொடைக்கானலில் நேற்று காலையில் இருந்தே குளிர்ச்சியான சூழல் நிலவியது. மதியம் 2 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதனால் பில்லர் ராக் உள்பட கொடைக்கானலில் பல்வேறு மலை முகடுகள் மேகங்களால் சூழப்பட்டது. மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்ச மூட்டம் ( தண்ணீர் மேகங்கள்) கொட்டியபடி சென்றது பலரையும் சிலிர்க்க வைத்தது.
மழையுடன் கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமை என்பதால் கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் கொடைக்கானலில் நிலவிய இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். பலர் மழையில் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது, ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்வது, சைக்கிள் சவாரி செய்வது என உற்சாகத்துடன் இருந்தனர்.
கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளை தாண்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் இன்றும் நாளையும் அதிக அளவில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு உள்ளது. இதனிடையே இன்று கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்கு போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications