மேட்டூர் டூ மயிலாடுதுறை.. 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு.. தடுக்க யாருமில்லாத காட்டாறாக மாறிய காவிரி
சேலம்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெறும் 16 நாளில் மேட்டூர் அணை அடியோடு மாறி உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், வரத்து நீரான வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே நிரம்பிவிட்ட கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அசுர வேகத்தில் அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 43-வது ஆண்டாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. இதனால் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அது அப்படியே வெளியேற்றப்பட்டது.
அதேநேரம் இந்த நீர்வரத்து நேற்று இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீரானது அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 2 லட்சம் கன அடிஅளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நேற்று நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 161 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரத்து 750 கன அடியும் என 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 750 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நேற்று இரவு 8 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து இருந்தது. இன்று காலை நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று 2 லட்சத்தை தாண்டிவிடும் என்பதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்தும் வெளியேற்றமும் 2 லட்சத்தை தாண்ட போவது உறுதியாகி உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் பலரும் மேட்டூருக்கு வருகின்றனர்.
அவர்கள் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சியை கண்டு ரசித்து செல்கிறார்கள். இதன் காரணமாக புதிய பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி கடை மடைக்கு தண்ணீர் வராமல் இருந்தது. எனினும் எப்போது வேண்டுமானாலும் வெள்ளநீர் கடைமடை பகுதிகளை அடையும் என்பதால், குளிக்கவோ அல்லது துணிதுவைக்கவோ கூடாது. அதேபோல் ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்வது நல்லதாகும். மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications