பொளக்கும் மழை! அதுவும் இடி மின்னலுடன்..சென்னை உட்பட 20 மாவட்டங்களில் விடாமல் கொட்டும்! கவனம் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, செங்கல்பட்டு உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு மழையைத் தரவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். வழக்கத்தை விட மழை குறைவாகவே இருந்தது.

அதேநேரம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை கணிசமாகவே பெய்து வருகிறது. கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவது மக்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது.
மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதான சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
20 மாவட்டங்கள்: அதேபோல சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் மழைக்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27 - ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
இன்று எங்கே மழை: இன்றைய தினம் (நவ. 23) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல நாளை (நவ. 24) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications