வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நாளை உருவாக வாய்ப்பு.. ரிப்பீட் மோடில் மழை
சென்னை: இந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழையை தந்துள்ளது. இந்த சூழலில் வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த பக்கம் நகர்கிறதோ அந்த மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளுக்கு பக்கமாக நேற்று முன்தினம் இரவு வந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்திருந்தது.

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து குமரிக்கடல் நோக்கி நகர்ந்து வலு இழக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம்அறிவித்தபடியே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கனமழை கொட்டி வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே வட கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம்,புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் வட கடலோர மாவட்டங்களில் இன்று காலை வரை மழை தொடரும் என்றும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை காலை வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழையின் இந்த 4-வது சுற்று மழைப் பொழிவு நாளை காலையுடன் முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார். இது எந்த பக்கம் நகரும் என்பதை பொறுத்து மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 4-வது சுற்று மழையை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கடுத்தபடியாக தலைஞாயிறு 15 செ.மீ., வேளாங்கண்ணி 13 செ.மீ., மதுராந்தகம் 12 செ.மீ., கொளத்தூர், மாதவரம், அம்பத்தூர் தலா 11 செ.மீ. என பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியிருந்தது.
நேற்று காலை 8.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 15 செ.மீ., மீனம்பாக்கம், பூந்தமல்லி 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம், கொளப்பாக்கம், தரமணி, திருத்தணி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை தலா 7 செ.மீ., திருவண்ணாமலை, திருநெல்வேலி தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 20 முதல் 30 செமீ மழைக்கு மேல் பெய்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications