வதக்கி எடுத்த வெயில்.. வேலூருக்கு நிம்மதி செய்தி சொன்ன வெதர்மேன்! சென்னைக்கு மழை இருக்கான்னு பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. அக்னி வெயில் தொடங்கியதாக சொல்லப்பட்டாலும் மழை காரணமாக ஒரு சில இடங்களில் வெயில் குறைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியிருக்கிறார்.
அதன்படி, "வேலூர் பகுதியில் மழைக்கான மேகம் அதிக அளவில் சூழ்ந்திருக்கிறது. இது திருப்பதியை நோக்கி நகர்கிறது. சென்னைக்கு மழை வேண்டும் எனில் வேலூருக்கு வடக்கில் மழை மேகங்கள் உருவாவதுதான் முக்கியம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள மேகங்கள் எந்த அளவுக்கு சென்னைக்கு நெருக்கமாக வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாலை முதல் மேகங்கள் ஓரளவுக்கு தெரிய தொடங்கியுள்ளன. அதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.

டெல்டா, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் பகுதிகளிலும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன" என்று வெதர்மேன் கூறியிருக்கிறார். நேற்று இரவு மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்தெடுத்திருக்கிறது.
அதேபோல இன்று வெளியாகியுள்ள வானிலை அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். எனவே,
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.9ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.13 மற்றும் 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications