சென்னைக்கு மிக கனமழை அலர்ட்.. கை கொடுத்த மெட்ரோ.. இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்
சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியதாவது:-
கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று முதல் வரும் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பச்சை வழித்தடத்தில் எம்.ஜி.ஆர். சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும்.
* நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் அண்ணா ஆலந்தூர் இடையே 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
*அதேபோல், காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
* இரவு 10 மணி முதல் 11 மணி வரை, பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் எம்ஜிஆர் சென்டிரலில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையத்துக்கு நேரடியாக செல்லும் ரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வாகன பார்க்கிங் வசதி செயல்படாது எனவும் மெட்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய அட்டவணைகள் வானிலை நிலையைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில்நிலைய வாகன பார்க்கிங் பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications