கோவை மக்களே அலர்ட்! தொடர்ந்து கொட்டும் மழை! மாவட்ட நிர்வாகம் பரபர எச்சரிக்கை- நிலைமை எப்படி இருக்கு?
கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், மழைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். கோவையில் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை நிர்வாகம்: இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணத்தால் கோவை மாவட்டத்தில் கனமழை முதல் மிக மழை பெய்ய வாய்ப்புள்ளதன் காரணத்தால் கீழ்க் கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையின் காரணத்தால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ பொழுதுபோக்கவோ அல்லது செல்பி (Selfie) எடுக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் மழைபெய்யும் நேரங்களில் வெளியில் இருக்கவேண்டாம் என்றும் உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்லவேண்டாம் எனவும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாதன பொருட்களைப் பாதுகாப்பாகக் கையாளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
சிதிலமடைந்த கட்டிடங்கள்: பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.
மழை / வெள்ள நீர் தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் எனவும் மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுதல் கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வெள்ள அபாயம் அல்லது தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம்.
உதவி எண்: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விருப்பப்படும்பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையமும் கூட கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை மையம் தனது தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications