கொங்கு + தென் மாவட்டங்களை குறி வைத்த கரு மேகங்கள்! அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 65% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 135.6 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 223.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1008.6 மி.மீ, கோவையில் 750.1 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 8.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 69.5 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -52, -26 சதவிகிதம் குறைவாகும்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. எனவே கடந்த சில நாட்களாக அங்கிருந்து மேட்டூருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்திருந்தது. தற்போதைய நீர் வரத்து குறைந்திருக்கிறது. அதாவது இன்று காலை நிலவரப்படி கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு 10,000 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது
இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், "ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கேவை, திப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யும்" என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications