அலறவிடும் மிக்ஜாம்! சென்னை உள்பட 3 மாநகராட்சி.. மீட்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் -தமிழக அரசு
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. மிக்ஜாம் புயல், தெற்கு ஆந்திரா-வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு அருகே நாளை நிலவும் என்றும், தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை மறு நாள் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை வெள்த்து வாங்கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவற்றை, அதற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், முன்னெச்சரிக்கை கருதி மீட்பு பணிகளுக்காக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும். தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவரம் பின்வருமாறு:
1.மண்டலம் -1, திரு.கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்.
2.மண்டலம் -2, திருமதி.எஸ். திவ்யதர்ஷினி. இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்.
3.மண்டலம் -3, திரு. சங்தீப் நந்தூரி. இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்.
4.மண்டலம் -4, டாக்டர். எஸ்.பிரபாகர், இ.ஆ.ப. திட்ட இயக்குநர், தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
5.மண்டலம் -5, டாக்டர்.கே. விஜய கார்த்திகேயன், இ.ஆ.ப. இணை மேலாண்மை இயக்குநர். மாநில மனித உரிமை ஆணையம்
6.மண்டலம் 6, திரு. பி. கணேசன். இ.ஆ.ப., இயக்குநர், நகர ஊரமைப்பு இயக்ககம்.
7. மண்டலம் 7, டாக்டர். எஸ். சுரேஷ் குமார். இ.ஆ.ப., முதன்மைச் செயல் அலுவலர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
8.மண்டலம் -8, திரு.எஸ். பழனிச்சாமி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்.
9.மண்டலம் -9, திரு.எம். பிரதாப், இஆ.ப., துணைச் செயலாளர். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை
10.மண்டலம் -10 , திரு.எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப.. நிர்வாக இயக்குநர். தமிழ்நாடு மிண்ணணு கழகம்
11.மண்டலம்-11, திருமதி.இ. சுந்தரவள்ளி, இ.ஆ.ப., ஆணையர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
12.மண்டலம்-12, திரு.ஏ.கே. கமல் கிஷோர். இ.ஆ.ப. இயக்குநர். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
13.மண்டலம் -13, திரு.எம்.எஸ். பிரசாந்த், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (பொது) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
14.மண்டலம்-14, திருமதி.வி.ஆர். சுப்புலட்சுமி.இ.ஆ.ப., இணை ஆணையர். வணிக வரித் துறை
15.மண்டலம் -15 திரு. கொ.வீரராகவ ராவ், இ..ஆ.ப., ஆணையர். தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
16. தாம்பரம் மாநகராட்சி - திரு. ஜான் லூயிஸ், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர்.. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.
17. ஆவடி மாநகராட்சி - திரு.ஏ.சண்முக சுந்தரம். இ.ஆ.ப. போக்குவரத்து ஆணையர்.
மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications