வேரோடு சாய்ந்த மரங்கள்.. கொட்டி தீர்த்த அதி கனமழை! ரெமல் புயலால் பாதிப்பின்றி தப்பித்த மேற்கு வங்கம்
கொல்கத்தா: வங்க கடலில் உருவான ரெமல் புயல் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கரையை கடந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மேற்கு வங்கத்தில் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
புயல்: வழக்கமாக மே மாதங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் மழை பொழிவு அதிகரித்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் கடந்த 26ம் தேதி காலை புயலாகவும் மாறியது.

தீவிர புயல்: வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, புயல் தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்தது.
இது நேற்று காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
வேரோடு சாய்ந்த மரங்கள்: பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு, வங்க தேச கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடந்தது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. எனவே மேற்கு வங்கத்தில் கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.
வலுவிழக்கும் புயல்: இருப்பினும், புயல் குறித்து ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டதால், அம்மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. எனவே இது வரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் மழை இன்னும் முழுமையாக நிற்கவில்லை. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கொல்கத்தாவின் நிலை: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளன. இதனை அப்புறப்படுத்தம் பணியில், கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். வடக்கு ஒடிசாவிலும் இதே போன்று சில இடங்களில் மரங்கள் சரிந்துள்ளன. ஹவுரா, ஹூக்லி, கொல்கத்தா மற்றும் கிழக்கு மேதினிபூர் ஆகிய இடங்களில் காற்று பலமாக வீசியிருக்கிறது. இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
நரேந்திர மோடி: புயல் மேற்கு வங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications