சென்னையில் கோடை மழை இப்போதைக்கு இல்லை.. உள் மாவட்டங்களில் எப்படி? ஜில் அப்டேட் கொடுத்த பாலச்சந்திரன்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். மேலும், கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒருவாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோடை மழைக்கு வாய்ப்பு: அப்போது அவர் கூறியதவாவது:- வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவியது. அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பில் இருந்து 2 ல் இருந்து 4 செல்சியசும், வட உள் தமிழகத்தில் இயல்பை விட 3 முதல் 5 செல்சியஸ் வரையிலும் அதிகமாக பதிவாக கூடும்.
வெப்ப அலையை பொறுத்தவரை மே 6 ஆம் தெதி வரை வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 5 தினங்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சியை ஒட்டியுள்ள மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும்.
7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: மே 7 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழையை பொறுத்தவரை கடந்த மார்ச் 1 முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 6 செ.மீட்டர் ஆனால் இன்று வரை பெய்துள்ள மழை அளவு 1 செ.மீட்டர். இது இயல்பு நிலையை விட 74 சதவிகிதம் குறைவு ஆகும்.
சென்னையில் வாய்ப்பில்லை: சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அதிகபட்ச வெப்ப நிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். சென்னையில் தற்போதைய நிலவரத்திற்கு கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒருவாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வானிலை மையம் அறிவிப்பு: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வெப்பம் குறையும்: 8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications