வடபெரும்பாக்கத்தை சூழ்ந்த மழைநீர்.. தத்தளிக்கும் மக்கள்.. களத்தில் இறங்கிய மாநகராட்சி ஊழியர்கள்
சென்னை: சென்னை மாதவரம், வடபெரும்பாக்கத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்னை அருகே வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழை நேற்று இரவு முதலே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்ததால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது சென்னையில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் ஒரு சில இடங்களைத் தவிர போக்குவரத்து மீண்டும் சீரடைந்து வருகிறது. சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்குப் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் தேங்கிய நிலையில் தற்போது படிப்படியாக வடிந்து வருகிறது. சென்னை மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளிக்கிறது. மாதவரத்தில் இருந்து வடம்பெரும்பாக்கம், வடகரை, இளங்கால்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு வடம்பெரும்பாக்கம் பிரதான சாலையைத் தான் அப்பகுதி மக்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில், அந்த சாலைகள் முழுவதுமே மழை நீரால் சூழப்பட்டுள்ளதால் வடபெரும்பாக்கம், இஎஸ் மணி நகர், ஆண்டாள் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பகளை மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அப்பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் நேற்று முன்தினமே குடியிருப்புகளை விட்டு வெளியேறி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் புயலின்போது வடபெரும்பாக்கம் கடுந்த பாதிப்புக்குள்ளாகும்.
மழை நீர் வடிவதற்கே இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சென்னையில் படிப்படியாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புழல் ஏரியின் அருகில் உள்ள பகுதி என்பதால் வடபெரும்பாக்கம் பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம், வடகரை, இளங்கால் பாக்கம் வழியாக செல்லக் கூடிய வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டு வருகின்றனர்.
ஒருவழிப் பாதையாக மட்டும் இந்தப் பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications