வங்கக்கடலில் "சம்பவம்" இருக்கு.. இன்னும் 2 நாள்.. கொட்டப் போகுது வடகிழக்கு பருவமழை.. வந்தது வார்னிங்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும்நிலையில், சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, எச்சரிக்கையும் செய்துள்ளது.
நேற்று முன்தினம் வானிலை மையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஆய்வு மையம்: இதன் காரணமாக அக்டோபர் 20 (இன்று) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையுமா, அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.
வானிலை மையம்: இந்நிலையில், சென்னை வானிலை மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:
இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் நிறைவடைகிறது. இப்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும்.
கடந்த ஜூன் முதல் பெய்து வந்த, தென் மேற்கு பருவமழை, வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து, காற்று வீசுவதுஅதிகரித்துள்ளது. இதனால், தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை பெய்யும்.
பருவமழை: தற்போது அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் இன்னொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 21-ம் தேதியை ஒட்டி துவங்கக்கூடும். இந்த 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியபகுதிகளில் வலு குறைந்து காணப்படும். அரபிக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடலுக்கு வரும் 23-ம் தேதி வரை செல்ல வேண்டாம்..
வங்கக்கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை செல்ல வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
மழை நிலவரம்: ஏற்கனவே, தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், தற்போது அரபிக்கடல் பகுதியிலும், வங்கக்கடல் பகுதியிலும் என 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் துவங்க உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பொதுமக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
