காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.. கர்நாடகாவில் மழை “சக்கைப்போடு”.. பெருக்கெடுக்கும் நீர்!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில், தென்மேற்குப் பருவமழை துவங்கும். கடந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திலேயே, வெயில் வதைக்க ஆரம்பித்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டு போகத் தொடங்கின. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், மாலையில் மழை பெய்து வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் தினமும் மாலையில் மழை பெய்து வருகிறது. பெங்களுரின் பெரும்பாலான பகுதிகளில், நேற்றும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
துமகூரு குப்பியில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உத்தர கன்னடாவின் சிர்சி பனவாசியில் நேற்று மழை பெய்தது. அரசிகெரேயில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்து உள்ளது. மைசூரில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கர்நாடக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கோடை மழை தீவிரம் எடுத்து உள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. தலக்காவிரியில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக வறண்டு போயிருந்த காவிரி ஆற்றில், தொடர் மழையால் தண்ணீர் ஓடுகிறது.
கர்நாடகாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடகு, சிக்மகளூர், சிவமொக்கா, உடுப்பி, தட்சின கண்ணடா, உத்தர கன்னடா மாவட்டங்களிலும் பெங்களூர், கோலார், சாம்ராஜ்நகர், சிக்பல்லாபூர், மாண்டியா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தெற்கு, வடக்கு, கடலோர கர்நாடகா, உள் கர்நாடக மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடை பெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மாதம் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர் 9.1 டி.எம்.சி உட்பட மொத்தம் 16.6 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் வழங்க கர்நாடகத்துக்கு முறையாக உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
வரும் ஜூன் 12-ந்தேதிக்கு பின்னர் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா தரப்பு, தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், பருவமழை பெய்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் காவிரி நீர் திறக்கப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications