அரபிக்கடல் + வங்கக்கடலில் பெரிய சீற்றம்.. ஜூன் 18 வரை தமிழ்நாட்டில் பலத்த மழை இருக்கு: வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. அத்துடன் மீனவர்களுக்கும் முக்கிய அலர்ட் ஒன்றினையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
கோடை வெப்பம் முடிந்தபிறகும், தமிழகத்தின் பல பகுதிகளில் மேல்வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது.. இதனால், அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

அதாவது, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், நேற்றைய தினமும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.
திண்டுக்கல் மழை: அதேபோல இன்று அதாவது 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். என்றும், தேனி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனால், இன்றைய தினம் மேற்கண்ட மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், வரும் 18ம் தேதி வரை தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு என்று மீண்டும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அந்த அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.
தொடரும் மழை: வானிலை மையம் மேலும் இதுகுறித்து கூறும்போது, 'நாளை 14, நாளை மறுநாள் 15 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை பதிவு: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செமீ, சென்னை மணலி, கத்திவாக்கம், கடலூர் மாவட்டம் வேப்பூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்று, தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications