ஒரு சொட்டு மழைநீர் இல்லை.. சுரங்கப்பாதைகளின் தற்போதைய நிலை.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட காட்சிகள்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய சில பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. சிசிடிவி காட்சிகளின் படங்களை பகிர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக பல இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக கொளுத்தி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை கிண்டி, மந்தைவெளி, மயிலாப்பூர், அடையார், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சென்ட்ரல், ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், கீழப்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், திருவான்மியூர்,மேற்கு மாம்பலம், மடிப்பாக்கம் என சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், போரூர், பூந்தமல்லி, மதுரவாயல் , அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 13.4 செ.மீ மழையும், வானகரத்தில் 12.6 செ.மீ மழையும், மணலியில் 12.4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக சென்னை ஆவடி அருகே சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியது. தண்ணீர் வெளியேறாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நேற்றிரவு பெய்த கனமழையால் சென்னையில் ஒரு சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது அனைத்திலும் நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராகியுள்ளது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளின் தற்போதைய நிலை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி.












Click it and Unblock the Notifications